டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி ஒருபுறம் இருக்க, அனைத்து கருத்துக்கணிப்புகளும் பொய்யாகும் வகையில் பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் முதல்முறையாக டெல்லியில் முட்டை வாங்கியுள்ளது. ராகுல்காந்தியின் பேச்சு டெல்லி மக்களிடம் சுத்தமாக எடுபடவில்லை என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.
அதே நேரத்தில் கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் வீசிய மோடி அலை, தலைநகரில் மட்டும் வீசவில்லை என்பது அரசியல் நோக்கர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஊழலை ஒழிப்பதில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது, சிறுபான்மை மதத்தவர்களை ஆத்திரப்படுத்தும்போக்கும், ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்னும் எவ்வித உருப்படியான திட்டமும் அறிமுகப்படுத்தாத மத்திய அரசு என பல பலவீனங்கள் மோடியிடம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து முக்கிய தலைவர்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்:”
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
தற்போதைய இந்திய அரசியலில் ஆம் ஆத்மியின் வெற்றி மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு இடமில்லை என்பதை மக்களின் தீர்ப்பு மீண்டும் நிரூபித்துள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்
லவ் ஜிகாத் உள்ளிட்ட பாஜக பிரச்சாரங்களால் டெல்லியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மோடி அலை ஓய்ந்து விட்டது. அமோக வெற்றி பெற்றுள்ள அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
பாரம்பரிய அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து மக்கள் விலகிவிட்டனர் என்பதையே டெல்லி தேர்தல் எடுத்துரைக்கிறது. ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை மக்கள் விரும்புகிறார்கள். டெல்லி தேர்தலில் மக்கள் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி
டெல்லியில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த அலை நாடு முழுவதும் பரவும். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் பாரம்பரிய ஓட்டுகள் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளன. இந்த நேரத்தில் கட்சியின் தோல்வி குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார்
சமூகநீதியுடன்கூடிய வளர்ச்சியை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். ஆணவம், அராஜகத்தை அவர்கள் விரும்பவில்லை. டெல்லியில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலைமை பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஏற்படும்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா
பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் மக்கள் மிகச் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர். ஜம்மு- காஷ்மீரில் இனிமேலும் காலம் தாமதிக்காமல் பாஜகவும் மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே
(மோடி) அலை என்று சிலர் கூறினார்கள். ஆனால் அந்த அலையைவிட சுனாமி (ஆம் ஆத்மி) மிகப் பெரியது என்பதை டெல்லி மக்கள் புரியவைத்துள்ளனர். அமோக வெற்றி பெற்ற அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவை புறக்கணித்த டெல்லி மக்களுக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சமானிய மக்களின் முன்னேற்றத்துக்காக கேஜ்ரிவால் பாடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.