சமீபத்தில் டெல்லி சட்டமன்றதேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்று வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி உலக அளவில் கவனித்தக்க ஒரு அம்சமாக கருதப்படுகிறது. இந்த தோல்வி பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தோல்வியாகவே ஊடகங்கள் முதல் எதிர்க்கட்சி வரை கருத்து கூறிவருகிறது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியதற்கு மோடியை காரணம் கூற முடியாது என்ரும் இந்த தோல்விக்கு கிரண்பேடிதான் முழு காரணம் என்றும் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த தமிழிசை சவுந்தரராஜன், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு பிரதமர் மோடி காரணமல்ல, அது கிரண்பேடிக்கு ஏற்பட்ட தோல்வி.
மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து முடித்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் துணை ராணுவப் படையினரை வைத்து தற்போது சோதனையிடுவது காலம் கடந்த செயல்.
அதிமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். பாஜகவினர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தோம். ஆனால், காவல் துறையினர் புகார் கொடுத்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம்” என்றார் அவர்.