தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் வாழ்ந்து வந்த புண்ணிய பூமி ஸ்ரீரங்கம். ஜெயலலிதா உருக்கம்

Jayalalitha-lஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தலின் பிரச்சாரம் முடிவடைந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, தொகுதி மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் ஸ்ரீரங்கம் தன்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த பூமி என்ரும், தனது வீடே ஸ்ரீரங்கம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

‘ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே! உங்களில் ஒருவரான உங்கள் அன்புச் சகோதரி, உங்களின் பேராதரவை வேண்டி, மீண்டும் உங்களை இந்த அறிக்கை வாயிலாகத் தொடர்பு கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

ஸ்ரீரங்கம் என் தாய் மண்; ஸ்ரீரங்கம் என் சொந்த வீடு; ஸ்ரீரங்கம் தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் வாழ்ந்து வந்த புண்ணிய பூமி. எனவே தான், என் இதயத் துடிப்போடு கலந்துவிட்ட உறவு ஸ்ரீரங்கத்திற்கு உண்டு. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் நான் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது, வாக்காள பெருமக்களாகிய நீங்கள், என் மீது அளவில்லா அன்பு கொண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தீர்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வியக்கத் தக்க வாக்கு வித்தியாசத்தை அளித்தீர்கள். என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு முறையும் நீங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதை பொறுத்துக்கொள்ள முடியாத சூழ்ச்சியாளர்களின் சூது மதியால், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அளித்த வெற்றிச் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம் எந்தத் தொகுதியில், எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் அங்கே போட்டியிடுவது உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தான் என்று எண்ணி வாக்களிக்கும் உணர்வு கொண்டவர்கள் எனது அருமைத் தமிழக வாக்காளர்கள்.

இந்தத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களாகிய தாங்கள் அனைவரும் எனக்கே வாக்களிக்கும் எண்ணத்தோடு உங்களது பொன்னான வாக்குகளை ‘இரட்டை இலை’ சின்னத்தில் அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த 3½ ஆண்டுகளாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நீங்கள் அனைவரும் கண்கூடாக கண்டு வருகிறீர்கள். மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் எண்ணற்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் தங்கு தடையின்றி நடைபெறுவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அத்தகைய பணிகளோடு பள்ளிகள், கல்லூரிகள், தேசிய சட்டக் கல்லூரி, மாணவர் விடுதிகள், ஏராளமான அரசு கட்டடங்கள், குடிநீர்த் திட்டங்கள், சாலைகள், பாலங்கள் என பல புதிய உள் கட்டமைப்பு வசதிகளும், தொலை நோக்கு திட்டங்களும் ஏராளமாக ஸ்ரீரங்கம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

எனது முயற்சிகளுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில், இந்த இடைத் தேர்தலில், கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்தை மகத்தான வெற்றி பெறச் செய்வதோடு, எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று எனதருமை வாக்காளப் பெருமக்களாகிய உங்களை மீண்டும் ஒரு முறை அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகின்ற 13 ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ள இடைத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அன்பு சகோதரி எஸ்.வளர்மதிக்கு நீங்கள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு அளிக்கும் வாக்காகவே கருதப்படும். எனவே, நானே போட்டியிடுவதாகக் கருதி, ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்யுங்கள்

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply