கடந்த 2012ஆம் ஆண்டில் கோஸ்டா கன்கார்டியா என்ற சொகுசு கப்பல் இத்தாலி கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அக்கப்பல் திடீரென நடுக்கடலில் பனிபாறை ஒன்றின் மீது மோதிய விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கப்பல் ஊழியர்கள் உள்பட 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கப்பலில் ஊழியர்கள் உள்பட மொத்தம் 4262 பேர் பயணம் செய்த நிலையில் மீட்புக்குழுவினர்களின் தீவிர நடவடிக்கையால் கப்பலில் பயணம் செய்த 4229 பயணிகள் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கு கப்பல் கேப்டன் பிரான் செஸ்கோ ஷெட்டினோ அவர்களின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது மீது வழக்கு தொடரப்பட்டது.
கப்பல் கேப்டனை கைது செய்த போலீஸார் அவர் மீது கிரிமினல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 19 மாதங்களாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த தீர்ப்பில் கப்பல் கேப்டன் பிரான்செஸ்கோ ஒரு கொலை குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 16 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. முன்னதாக அவருக்கு 26 ஆண்டு தண்டனை வழங்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர்.
இருந்தும் கோர்ட்டு அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதில் 10 ஆண்டுகள் கொலை குற்றத்துக்காகவும், 5 ஆண்டுகள் கப்பல் உடைந்து சேதம் ஏற்படுத்தியதற்காகவும், ஒரு ஆண்டு தனது பயணிகளை காப்பாற்றாமல் கைவிட்டதற்காகவும் வழங்கப்பட்டது.