ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பகல் 11.30 மணி வரை 34.37% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பொதுமக்கள் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, ஸ்ரீரங்கம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 322 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 16.2 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குபதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகின்ற 16 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில், தி.மு.க. சார்பில் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வளர்மதி, பா.ஜ.க. சார்பில் சுப்பிரமணியம், சி.பி.எம். சார்பில் அண்ணாதுரை மற்றும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக இணையதளத்தில் பார்க்க தமிழக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைமுறைகள் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்தக் காட்சிகளை பொதுமக்கள் நேரலையாக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் (www.elections.tn.gov.in) மூலம் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 5 அதிவிரைவு படைகள், போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.