சுற்றுச்சூழலில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டே பழங்காலத்தில் வீடுகள் முதலான கட்டுமானங்கள் கட்டப்பட்டன. இப்போது நமது சூழலை ஒட்டிய கட்டுமானங்கள் பற்றிய விழிப்புணர்வு பரவிவருகிறது. என்றபோதும் நவீனக் கட்டுமானங்களில் அதுவும் குடியிருப்பு சாராதவற்றில் வேதிப்பொருட்களின் பயன்பாடு இல்லாமல் கட்டிடங்கள் நவீனத் தோற்றம் பெறுவதில்லை என்பதே உண்மை.
இதன் சாதக, பாதகங்களைக் கடந்து இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை பயன்படுத்தப்படுவதால் சில ஆதாயங்கள் கிடைக்கும் எனும்போது இவற்றைப் பயன்படுத்தினால் தப்பில்லை என்னும் நிலையே தற்போது உள்ளது என்கிறார்கள் கட்டுநர்கள். இந்திய வேதிப்பொருட்கள் உற்பத்தியில் முக்கியமான இடம்பெறுகிறது கட்டுமான வேதிப்பொருட்கள்.
உலக சிமெண்ட் உற்பத்தியில் ஐந்து சதவீதத்தை இந்தியா பூர்த்திசெய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உலக அளவில் நகரமயமாக்கமும் பெரும் நகரங்களின் உருவாக்கமும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இந்நிலையில் கான்கிரீட்டின் பயன்பாடு என்பது கட்டுமானத் துறையில் ஆழமாக வேரூன்றியது.
கட்டுமான வேதிப்பொருள்கள் கான்கிரீட்டின் உறுதித் தன்மையை அதிகரிக்கப் பெரிதும் துணையிருக்கின்றன. ஆயிரம் கிலோ எடையைத் தாங்க நூறு செ.மீ. விட்டம் கொண்ட பில்லர் தேவைப்பட்ட இடத்தில் இப்போது பத்து செ.மீ. விட்டம் கொண்ட பில்லர் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் இத்தொழில் நிபுணர்கள். இது சாத்தியமாக வேதிப்பொருட்களே உறுதுணையாக இருக்கிறது.
பெருகிவரும் பயன்பாடு
ஆகவே கட்டுமானப் பொருள்களில் தவிர்க்க இயலாதது வேதிப்பொருள்கள் என்ற நம்பிக்கையே இப்போது நிலவிவருகிறது. உயரமான கட்டிடங்கள் கட்டுவதற்கும் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கவும் இந்த வேதிப்பொருள்கள் உதவுகின்றன.
நீர்க்கசிவால் கட்டிடம் பாழ்பட்டுப்போகும் நிலையிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்கவும் சில வேதிப்பொருட்கள் பயன்படுகின்றன. இப்போது பயன்படும் தயார்நிலை கான்கிரீட்டில் கான்கிரீட்டின் இறுகும் தன்மையை நமக்கு ஏற்ற வகையில் சீரமைக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பழைய கட்டிடங்களைப் புனரமைப்பு செய்யும்போதும் பெருமளவில் கைகொடுத்து உதவுபவை வேதிப்பொருட்களே. ஏனெனில் இவற்றை அடிப்படையாக வைத்தே முழுப் புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்கிறார்கள்.
கான்கிரீட் கலவை, தரைத் தளங்கள் அமைக்க, புனரமைப்பு மேற்கொள்ள, நீர்க்கசிவு தடுப்பு மற்றும் பிற காரணங்களுக்காக கட்டுமானத் துறையில் கட்டுமான வேதிப்பொருள்கள் பெருமளவில் உதவுகின்றன. கட்டுமான வேதிப்பொருட்கள் சந்தையின் பிரதான இடத்தை கான்கிரீட் கலவைக்கான வேதிப்பொருட்களே தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.
அதற்கடுத்த இடத்தைப் பிடித்திருக்கின்றன தரைத் தளங்கள், நீர்க்கசிவு போன்றவற்றுக்கான வேதிப்பொருட்கள். இதேபோல் ஒட்டுவதற்கான பசை போல் செயல்படும் வேதிப்பொருட்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பயன்படுகின்றன.
பயன்பாட்டுக் காரணங்கள்
கட்டுமான வேதிப்பொருட்கள் கட்டுமானச் செலவை இரண்டு முதல் மூன்று சதவீதம் உயர்த்திவிடுகிறது என்றாலும் அவற்றால் கிடைக்கும் அனுகூலங்களைப் பார்க்கும்போது இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்கிறார்கள்.
குறிப்பிட்ட சில வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் கான்கிரீட், தண்ணீர் ஆகியவற்றின் தேவையைக் குறைக்க முடியும். உயர்தர கான்கிரீட்டைப் பெறவும் அதன் செயல்திறனை மேம்படுத்தவும் வேதிப்பொருட்கள் உதவுகின்றன.
கட்டிடங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தரவும், இயற்கை ஆபத்துகளிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்கவும் இவை பயன்படுகின்றன. பலவகைப் பயன்பாடுகள் இருந்தபோதும் முறையான வழிகாட்டிகள் போதுமான அளவுக்கு இருக்கின்றனவா என்பது சந்தேகமே.
மேலும் விபத்துகளை ஏற்படுத்தாமல் வேதிப்பொருள்களை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்த திறமையான பணியாளர்கள் அதிக அளவில் கட்டுமானத் துறையில் ஈடுபடும்போது இதன் அனுகூலங்களை அதிகம் பெறலாம் என்கிறார்கள் கட்டிடக் கலை நிபுணர்கள்.