சென்னையில் இயங்கி வரும் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று, தங்கள் போராட்டத்தைக் வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்தனர்.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யவிருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு செய்வதை எதிர்த்து, கடந்த 10 நாட்களாக கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டமும், கல்லூரிக்கு வெளியே பஸ் மறியல் உள்பட பல்வேறு நூதன போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றம் மூலமாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடிவு செய்த சட்ட மாணவர்கள் திட்டமிட்டனர். மாணவர்கள் போராட்டத்தை தொடர வேண்டும் அல்லது நீதிமன்றத்தை நாடவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த அறிவுறுத்தலை அடுத்து, போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மாணவர்கள் விளக்கம் அளித்தனர். அடுத்தகட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 18-ம் தேதி வரை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கல்லூரிக்கு வர இருக்கும் மாணவர்கள் மற்ற சட்டக் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.