கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கப்படுகிறது. மாலைக்குள் முழு முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் சீ. வளர்மதி, திமுக வேட்பாளர் என். ஆனந்த், பாஜக வேட்பாளர் எம். சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் க. அண்ணாதுரை உள்பட மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.
இவர்களில் யார் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறையில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மொத்தம்14 மேசைகளில், 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் நேரடியாகக் கண்காணிக்கும் வகையிலான கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையப் பணிகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது.
ஒவ்வொரு மேசைக்கும் ஒரு நுண்பார்வையாளர், ஒரு வாக்கு எண்ணிக்கை அலுவலர், ஒரு உதவியாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து தலா 20 நிமிஷங்களுக்கு ஒரு முறை சுற்றுகளின் முடிவுகள் வெளியாகும் எனவும் பிற்பகல் சுமார் 2 மணிக்கு இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.