கடந்த 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் கோவா மாநிலத்தில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
250க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டார். அவரை பிடிக்க மோடியின் பாஜக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்
தாவூதின் கூட்டாளி ஷாம் கிஷோர் கரிகாபட்டி என்று அழைக்கப்படும் கருந்தேள் என்பவரையும் மும்பை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர்.
கருந்தேள் கடந்த 8 வருடங்களாக கோவா மாநில தலைநகர் பனாஜி அருகே உள்ள சலிகாவ் என்ற கிராமத்தில் வேறு பெயரில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் அவரை பொறிவைத்து நேற்று கோவா போலீஸார் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் கண் காணிப்பாளர் கார்த்திக் காஷ்யவ் கூறியபோது, கைது செய்யப்பட்ட ஷாம் கிஷோர் கரிகாபட்டி விரைவில் மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்தார்.