அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று பாலியல் வழக்கு குறித்த செய்தி ஒன்றை ஒளிபரப்பியபோது குற்றவாளியின் புகைப்படத்திற்கு பதிலாக அதிபர் ஒபாமாவின் புகைப்படத்தை ஒளிபரப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அந்த தொலைக்காட்சி நிர்வாக அதிகாரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான KSWB டிவி, நேற்று இரவு 10 மணி செய்திகளை ஒளிபரப்பி வந்தபோது, அதில் ஒரு செய்தியாக கல்லூரி மாணவர் ஒரு உடன் படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்தது குறித்த செய்தியை கேத்லீன் என்பவர் வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது குற்றவாளியான மாணவரின் புகைப்படத்திற்கு பதிலாக ஒபாமாவின் புகைப்படம் தவறுதலாக காண்பிக்கப்பட்டது. 10 நொடிகளில் சுதாரித்துக்கொண்ட தொலைக்காட்சி நிர்வாகம் உடனடியாக ஒபாமாவின் படத்தை அகற்றிவிட்டது.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து பரபரப்புடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் தொலைக்காட்சியின் நிர்வாக அதிகாரி நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தார்.