பழம்பெரும் நடிகை மனோரமாவின் உடல்நலம் குறித்து நேற்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ் சினிமா ரசிகர்கள் அவரது மகனுக்கு போன் செய்து விசாரித்தபோதுதான் இது வதந்தி என்பது உறுதியாகியது.
இந்நிலையில் தன்மீதான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று நடிகை மனோரமா பத்திரிகையாளர்கள் முன் தோன்றி பேட்டியளித்தார். அதில், “‘எனக்கு உடல் நலக்குறைவு எதுவுமில்லை. உங்கள் அன்பும், ஆதரவுடன் நான் மிகவும் நலமாகவே இருக்கிறேன். எனது உடல்நலனில் அக்கறை காட்டுவது எனக்கு பெருமையாக உள்ளது.
நான் இறந்து விட்டதாக பரவிய வதந்தியை ஒரு திருஷ்டி கழிப்பாகவே எடுத்துக்கொள்கிறேன். என் ஆசை, நான் நடித்து கொண்டிருக்கும் போதே என் உயிர் பிரிய வேண்டும் என்று கடவுளை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
நடிப்புதான் என் உயிர்மூச்சு. ரசிகர்களின் கைதட்டல் எங்களை வாழவைக்கும் டானிக் போன்றது. அது எனக்கு முழுமையாக கிடைத்தது. எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டினேன் என ரசிகர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது”
இவ்வாறு நடிகை மனோரமா கூறினார்.