சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 25 ஆம் தேதி முதல் 4 நாட்கள் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிப்பணிகள் முடங்கும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
சம்பளஉயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் கடந்த சில நாட்களாகவே போராட்டம் நடத்தி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் நடத்த திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து வருகின்ற 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக வங்கி தொழிலாளர்களின் சங்கங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு பின்னும் உடன்பாடு ஏற்படாமல் இருந்தால் மார்ச் 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய நேரிடும் என்றும் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.