ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த அஜீத் மீது மும்பையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் வளைத்து போட முயற்சி செய்வதாக திடுக்கிடும் செய்தி ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் சினிமாவில் முதலீடு செய்ய ஆரம்பித்தவுடன் படங்களின் பட்ஜெட் சர்வசாதாரணமாக கோடிகளை தொட்டுள்ளது. அதே நேரத்தில் பாலிவுட்டில் பெரிய ஸ்டார்களை வளைத்து போட்டு அவர்கள் நடிக்கும் படங்களை பெரும் பொருட்செலவில் தயாரித்து கோடிக்கணக்கில் வருமானம் பெற்று வருகின்றனர். பாலிவுட்டை அடுத்து தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் கோலிவுட்டில் முழுவீச்சில் இறங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டை பொருத்தவரையில் நல்ல ஓபனிங் கொடுக்கும் நடிகர்கள் என அஜீத், விஜய் ஆகிய இருவரையும் குறிவைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், முதல்கட்டமாக அஜீத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் படங்கள் நல்ல கலெக்ஷனை கொடுத்து வந்தபோதிலும் அடிக்கடி அவரது படங்கள் ரிலீஸுக்கு முன் சர்ச்சையில் சிக்குவதால் அவரை பட்டியலில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கழட்டிவிட்டு விட்டதாகவும், அஜீத்தை மட்டும் வளைத்து போட பெரும் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அஜீத் இந்த வலையில் சிக்கமாட்டார் என்றே அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நலிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு உதவும் வகையில்தான் அஜீத் முடிவெடுப்பார் என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் அவர் சிக்க மாட்டார் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.