சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
அப்போது அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். ஏழை மக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கியவர், மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுகிறார். அதனால் தான் மக்கள் முதல்வர் என்று நாடே போற்றுகிறது என்றார். இன்று இங்கு அன்புதாய் இல்லை என்றாலும் விரைவில் சட்டசபைக்கு வருவார். முதல்–அமைச்சர் நாற்காலியில் அமர்வார் என்றார்.
அதன் பிறகு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி விவரங்களை பட்டியலிட்டார். அப்போது ஜெ.அன்பழகன் (தி.மு.க.) குறுக்கிட்டு, பெண்ணாகரம், வந்தவாசி உள்ளிட்ட எல்லா இடைத்தேர்தலையும் சேர்த்துப்படியுங்கள் என்றார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அமைச்சர் வைத்தியலிங்கம்:– தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் பார்முலா என்று சொன்னீர்களே? அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் ஜனநாயகத்தையே குழி தோண்டி புதைத்தவர்கள், இப்போது துணை சபாநாயகர் பேசும்போது, ஜெ.அன்பழகன் குறுக்கீடு செய்கிறார். அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி ஜெயராமன்:– ஜெ.அன்பழகன் சர்க்கஸ் கோமாளி போல் பபூன்போல் எழுந்து பேசுகிறார். (இதற்கு ஜெ.அன்பழகன் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்)
ஜெ.அன்பழகன்:– என்னை கோமாளி என்று சொல்கிறார். இதை எப்படி அனுமதிக்கிறீர்கள். கோமாளி என்று சொன்னதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
சபாநாயகர்:– ஜெ.அன்பழகன் தேவையில்லாமல் பேசுகிறார். இது முறையல்ல. கோமாளி என்ற வார்த்தை சபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தை இல்லை.
ஜெ.அன்பழகன்:– கோமாளி என்று எப்படி சொல்ல முடியும். அதை அவை குறிப்பில் இருந்து கண்டிப்பாக நீக்க வேண்டும்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:– உறுப்பினர் சொல்லும் அந்த வார்த்தை சட்டமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தையாக இருந்தால் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார். எனவே தி.மு.க.வினர் இருக்கையில் அமருங்கள்.
சபாநாயகர்:– இது சம்பந்தமாக விதிமீறல் குறித்து விதிகளை ஆய்வு செய்து சொல்கிறேன். எனவே சபையை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு தாருங்கள். தி.மு.க.வினர் அவரவர் இருக்கைக்கு சென்று அமருங்கள். (உடனே தி.மு.க.வினர் இருக்கையில் அமர்ந்தனர்)
பொள்ளாச்சி ஜெயராமன்:– விலை இல்லா அரிசி, அம்மா உணவகம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் புரட்சித்தலைவி. ஆனால் மானாட மயிலாட பார்த்து விட்டு கடிதம் எழுதி, தமிழர் தமிழர் என சொல்கிறாரே… இலங்கை தமிழர்கள் சாவுக்கு யார் காரணம்?
ஜெ.அன்பழகன் எழுந்து இவர் யாரைச் சொல்கிறார்? இதற்கு பதில் சொல்லச் சொல்லுங்கள் என்றார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபையில் பரபரப்பாக வாக்கு வாதம் நடந்து கொண்டு இருந்த நிலையில் சபாநாயகர் சட்டசபையில் ஏற்கனவே பதிவாகி இருந்த வாசகங்களை வாசித்தார். அதில் கடந்த 98–ம் ஆண்டு ஏப்ரல் 2–ந் தேதி துரைமுருகன், கோமாளிகளைப் போல் பேசக் கூடாது என்று பேசியது சபை குறிப்பில் இடம் பெற்று இருப்பதை சுட்டிக் காட்டினார். எனவே பொள்ளாச்சி ஜெயராமன் பேசிய வார்த்தை குறித்து நீங்கள் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டியதில்லை. உங்கள் உறுப்பினர் துரைமுருகனே இவ்வாறு பேசியிருப்பதால் நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று சபாநாயகர் கூறினார்.
ஜெ.அன்பழகன், டி.ஆர்.பி.ராஜா, பெரிய கருப்பன், சிவ சங்கர் உள்ளிட்ட அனைத்து தி.மு.க.வினரும் இருக்கையை விட்டு எழுந்து சபாநாயகரை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போடுவது போல் சத்தமாக பேசினார்கள். கோமாளி என்று நேரடியாக சொல்வதை எப்படி ஏற்க முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்டவில்லை. என்னை முற்றுகையிடுவது தவறு. இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று சபாநாயகர் எச்சரித்தார்.
தி.மு.க.வினர் அதை பொருட்படுத்தாததால் அவர்களை சபையில் இருந்து வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே சபை காவலர்கள் வந்து தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றினர்.
அப்போது துரைமுருகன், ‘‘நான் இருக்கையிலே இருக்கிறேனே’’ என்றார். பின்னர் அவரும் தி.மு.க.வினருடன் வெளியேறினார்.
இந்த விவாதத்தின் போது மு.க.ஸ்டாலின் அங்கு இல்லை. தனது அறையில் அமர்ந்து இருந்தார். முன்னதாக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.
அமைச்சர் நத்தம் விசுவநாதன்:– ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நேரம் இல்லாத நேரம் கிடையாது என்பது மூத்த உறுப்பினர்களுக்கு தெரியும். அதன் பிறகும் தி.மு.க. உறுப்பினர்கள் அவையில பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்பது சரியா?
தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று பேச அனுமதி கேட்டனர். சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இதே போல் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் பல்வேறு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–
மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவ–மாணவிகள் வேலை வாய்ப்பில் தங்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறார்கள். தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்கள். இதில் 6 மாணவிகளும், 6 மாணவர்களும் மயக்கம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி தரவில்லை.
இதுபோல் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இதுபற்றி பேச அனுமதி கேட்டோம். அனுமதி தர வில்லை.
எனவே முக்கிய பிரச்சினை பற்றி பேச அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.