மத்திய அரசின் சமையல் கியாஸ் சிலிண்டர் (எல்.பி.ஜி.) நேரடி மானிய திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களது வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நுகர்வோர்களுக்கு, சிலிண்டர் ஏஜென்சிகள் எச்சரிக்கை விடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கழகம் (ஐ.ஓ.சி.) தலைமை தொடர்பு மேலாளர் வி.வெற்றி செல்வகுமாரிடம் கேட்டபோது, அவர் விளக்கமளித்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 50 லட்சத்து 41 ஆயிரத்து 65 பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். இதில் 89 லட்சத்து 67 ஆயிரத்து 403 பேர் இந்தியன் ஆயில் கழகத்திலும் (ஐ.ஓ.சி.), 38 லட்சத்து 43 ஆயிரத்து 134 பேர் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திலும், 22 லட்சத்து 30 ஆயிரத்து 528 பேர் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திலும் இணைப்பை பெற்றுள்ளனர்.
மத்திய அரசு நேரடி மானிய திட்டத்தில் 18-ந் தேதி நிலவரப்படி (நேற்று வரை) மொத்தம் 74.1 சதவீத இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியன் ஆயில் கழகத்தில் 73.76 சதவீத வாடிக்கையாளர்களும், பாரத் பெட்ரொலிய நிறுவனத்தில் 73.63 சதவீத வாடிக்கையாளர்களும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் 76.24 சதவீத வாடிக்கையாளர்களும் இதுவரை இணைந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக 80.43 சதவீத வாடிக்கையாளர்களும், குறைந்தபட்சமாக கரூர் மாவட்டத்தில் 68.56 சதவீத வாடிக்கையாளர்களும் நேரடி மானிய திட்டத்தில் சேர்ந்துள்ளனர். சென்னையில் 71.42 சதவீத வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் இணையாத வாடிகையாளர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து மார்ச் 31-ந் தேதி வரை கருணை காலம் ஆகும்.
இந்த காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும். கருணை காலம் முடிவடைவதற்குள் மானிய திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு, வினியோகிப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானிய தொகை மொத்தமாக சேர்க்கப்பட்டுவிடும். கருணை காலத்திலும் மானிய திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும். ஆனால் அவர்களுக்குரிய மானிய தொகை எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.
ஜூலை 1-ந் தேதிக்கு பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு வாடிக்கையாளரும் இணைந்தால் இணைந்த தேதியில் இருந்து தகுதிக்கு தகுந்தபடி நிரந்தர முன்வைப்புத் தொகை மற்றும் மானியம் அனுமதிக்கப்படும். மானியம் பெற விரும்பாத நுகர்வோர்களுக்கு தொடர்ந்து சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும். எனவே மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களது வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தி வைக்கப்படும் என்று வெளியாகி உள்ள தகவல் வதந்தி தான். அதனை யாரும் நம்ப வேண்டாம். நுகர்வோர்களை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் ஆயில் நிறுவனங்கள் எடுக்காது.
சமையல் கியாஸ் சிலிண்டர் பெயர் மாற்றம் செய்வது தற்போது சுலபமாக்கப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ்களுடன் சிலிண்டர் ஏஜென்சிகள் அணுகினால் உடனே சமையல் கியாஸ் இணைப்பு மாற்றம் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.