அதிமுக உறுப்பினர் கூறிய ‘குடிமகன்’ என்ற வார்த்தைக்கு தேமுதிக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டசபையில் நேற்று பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. குடிமகன் என்ற அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தேமுதிக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியபோது, அதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக விவாதம் தொடங்கியது. அப்போது அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “சட்டப்பேரவைக்கு வராதவர்கள் கவர்னர் உரையில் எதுவும் இல்லை என்று குறைகூறுகின்றனர். அவர்களில் ஒரு முதியவரும் உண்டு. ஒரு சிட்டிசனும் இருக்கிறார். சிட்டிசன் என்றால் குடிமகன் என்று அர்த்தம் என்று கூறினார். உடனே தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று குடிமகன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர், சபாநாயகரை முற்றுகையிட்டு கூச்சல் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, சபாநாயகர் ப.தனபால், தேமுதிக எம்.எல்.ஏக்களை பார்த்து, உங்கள் இடத்துக்கு போய் அமருங்கள் என்றார். அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, “உறுப்பினர் கடம்பூர் ராஜூ, யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. யார் பெயரையும் அவர் சொல்லவில்லை. அதனால் அந்த வார்த்தைக்கு ஆட்சேபம் தெரிவிக்கத் தேவையில்லை” என்றார்.
சபாநாயகர் தனபால் இதுகுறித்து கூறியபோது, “யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாதபோது, தேமுதிக உறுப்பினர்கள் கற்பனையாக பொருள் கொள்ளக்கூடாது. அது முறையல்ல. நீங்கள் பேசுவது எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது. உங்கள் இடத்துக்குப் போய் அமருங்கள். உறுப்பினர் ராஜூ யாரையும் குறிப்பிட்டுப் பேசாமல் பேச்சைத் தொடருங்கள்.
குடிமகன் என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது” என்று சபாநாயகர் திட்டவட்டமாக கூறியதையடுத்து சில நிமிடங்களாக நீடித்த கூச்சல் குழப்பம் முடிவுக்கு வந்தது.