மக்கள் மனதில் இருந்து எங்களை யாராலும் சஸ்பெண்ட் செய்ய முடியாது. விஜயகாந்த் ஆவேசம்

 

vijayakanthநேற்று சட்டமன்றத்தில் தேமுதிகவினர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், சட்டசபையில் இருந்து மட்டும்தான் எங்களை சஸ்பெண்ட் செய்ய முடியும். மக்கள் மனதில் இருந்து எங்களை சஸ்பெண்ட் செய்ய யாராலும் முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

”சட்டசபை என்பது தமிழக மக்கள் பிரச்னையை பேசவும், அதற்கு தீர்வு காண்பதற்காகவும் தான் இருக்கிறது. சட்டசபையில் சிறிதும் நாகரீகமற்ற முறையில் தனி நபர் தாக்குதலை நிகழ்த்தவும் அவைக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களை பேசவும் தான் ஆளும் அ.தி.மு.க.வினர் முயல்கிறார்கள்.

தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி தே.மு.தி.க.வினரை வம்புக்கு இழுக்கும் செயலை அ.தி.மு.க.வினர் செய்யும்போது, அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளாகின்றனர்.

அந்த வகையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசியதற்கு சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திவிட்டார் என கூறி தே.மு.தி.க.வினரை மேலும் பேசவிடாமல் அவை காவலரை வைத்து கூண்டோடு வெளியேற்றியும், அவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகும்.

லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையோடு செயல்படும் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்தில் இருந்துதான் சஸ்பெண்ட் செய்ய முடியுமே தவிர மக்கள் மனதில் இருந்து ஒரு நாளும் இடைநீக்கம் செய்ய இயலாது”

இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply