பெங்களூரில் நடைபெற்று வரும் விமானத் தொழில் கண்காட்சியில், விமானங்கள் விண்ணில் சாகசம் செய்து கொண்டிருந்தபோது திடீரென இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதால், ஒரு விமானத்தின் பக்கவாட்டு இறக்கையும், இன்னொரு விமானத்தின் முகப்பும் சேதமடைந்தது. இருப்பினும் இந்த சம்பவத்தால் எவ்வித உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
பெங்களூரு எலஹங்கா என்ற விமானப் படை தளத்தில் 2-ஆவது நாளாக நேற்று நடைபெற்ற இந்திய விமானத் தொழில் கண்காட்சியில் பல்வேறு நாடுகளி இருந்து வந்த விமானங்கள் விண்ணில் பறந்து பல சாகசங்களை செய்து கொண்டிருந்தன. அப்போது, செக்கோஸ்லோவாகியா நாட்டைச் சேர்ந்த ஃப்ளையிங் புல்ஸ் சிறு விமானங்கள் அருகருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக அதன் இறக்கைகள் உரசிக் கொண்டன. இதில் ஒரு விமானத்தின் இறக்கை சேதமடைந்தது.
இந்த விமானத்தை ஓட்டிய 66 வயதான பைலட் ரட்கா மசோவா என்பவர் உடனடியான நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து பாதுகாப்பாக தரையில் விமானத்தை இறக்கினார். இதேபோல, மற்றொரு விமானத்தின் பைலட்டும் தன்னுடைய விமானத்தை தரையிறக்கினார்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக விமான சாகச நிகழ்ச்சிகள் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டு அதன் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.