அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் தேமுதிக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை இணைத்து மூன்றாவது அணி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவின் கூட்டணிக்கு முயற்சி செய்த மார்க்கிஸ்ட் கட்சி, கூட்டணியில் இடம் கிடைக்காததால் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால் இனி அதிமுக, திமுகவை நம்பி பயனில்லை என முடிவு செய்து தமிழகத்தில் புதிய கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய மார்க்சிஸ்ட் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதே அதிமுக, திமுகவின் கொள்கையாக உள்ளது என்றும், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை, வகுப்புவாத எதிர்ப்பு ஆகியவற்றை திமுக, அதிமுக கைவிட்டுவிட்டதாக குற்றம்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், மார்க்சிஸ்ட் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அ. சவுந்திரராசன், கொறடா கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சித்தனர். அதிமுக, திமுகவுக்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலரிடம் பேசியபோது, வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகைள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை இணைத்து 3-ஆவது அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வரும் ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் 3-ஆவது அணி அமைப்பது குறித்து விஜயகாந்த், ஜி.கே. வாசன், திருமாவளவன், வைகோ ஆகியோருடன் இடதுசாரி கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்கள் பேச இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.