தொழிலதிபரும், அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தருமான எம்.ஏ.எம் ராமசாமி அவர்களுக்கு வாரிசு இல்லாததால், ஐயப்பன் என்ற முத்தையாவை சுவீகாரம் எடுத்தார். ஆனால் தற்போது தனக்கு பிறகு தனது சொத்துக்கள் அனைத்தும் தர்ம அறக்கட்டளைக்கு சென்றடைய வேண்டும், ஐயப்பன் என்ற முத்தையாவுக்கு ஒரு நயா பைசா கூட சென்றுவிடக்கூடாது என்றும் ராமசாமி உயில் எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் செட்டிநாடு பல்கலைக்கழகத்தின் வேந்தரான எம்ஏஎம் ராமசாமியை நீக்கிவிட்டதோடு, அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை வேந்தராக நியமித்தார் முத்தையா. தனியார் பல்கலைக் கழகங்களின் வேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு விதித்த நிபந்தனைகளை எதிர்த்து ஏற்கனவே பல்கலைக் கழகங்கள் தரப்பிலிருந்து வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், வேந்தர்கள் நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தடை உத்தரவு அமலில் இருக்கையில் வேந்தரை மாற்றியது செல்லாது என்று கூறி எம்ஏஎம் ராமசாமி, நேற்று நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, முத்தையாவின் நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்து, அவரின் சுவீகாரத்தை குல வழக்கப்படி ரத்து செய்ததோடு, சட்டப்படி அதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எம்ஏஎம் ராமசாமி.
தான் எடுத்து வளர்த்த முத்தையாவே தனக்கு எதிராக திரும்பியுள்ளதால் கடும் அதிருப்தி அடைந்த அவர் தனக்கு சொந்தமான பத்தாயிரம் கோடி ரூபாய் மதிக்கத்தக்க அசையும், மற்றும் அசையா சொத்துக்களை எம்.ஏ.எம்.ராமசாமி தர்ம அறக்கட்டளை’ என்ற புதிய அறக்கட்டளைக்கு உயில் எழுதி வைத்ததோடு, இந்த அறக்கட்டளைக்கு நிர்வாக அறங்காவலராக எம்.ஏ.எம்., தனது அண்ணி குமார ராணி மீனா முத்தையா, ஏ.சி.முத்தையா உள்ளிட்ட மேலும் நான்கு அறங்காவலர்களையும் நியமித்திருக்கிறார்.
எம்.ஏ.எம் ராமசாமியின் உயில் செட்டிநாடு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.