ஆறுமுகனின் இரகசியம்

10668828_10204029084801690_1311548150164543312_o
ஓம் ‘சரவணபவ’ எனும் ஆறு எழுத்துக்கள் கொண்ட மந்திரத்திற்கு உரியவராதலால் ஷடாக்ஷரன் என்று முருகப்பெருமானுக்கு ஒரு பெயர் உண்டு.
கோல மயிலை தன் வாகனமாகக் கொண்டதால் சிகிவாகனன் என்று முருகப்பெருமான் வணங்கப்படுகிறார். சிகி எனில் மயில் என்று பொருள்.
சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு அன்னை பராசக்தியிடமிருந்து அவள் அம்சமாய் ஞானவேலைப் பெற்று சூரனை வதைத்தார், முருகன். அதனால் அவரை ஞானசக்திதரன் என்று தேவர்கள் போற்றினர்.
தினைப்புனம் காத்த வள்ளியம்மையை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட முருகப்பெருமானின் திருவுருவம் வள்ளிகல்யாணஸுந்தரன் என்று போற்றப்படுகிறது.
பிரணவத்திற்குப் பொருள் சொல்லத்தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து பிரம்மனின் கர்வத்தை அடக்கிய முருகன் பிரம்மசாஸ்தா என வழிபடப்படுகிறார்.
தேவேந்திரன் அளித்த சீதனமான ஐராவதம் எனும் வெள்ளையானையின் மீது ஆரோகணித்து அருளும் முருகன் கஜாரூடன் என வணங்கப்படுகிறார்.
ஓம் எனும் பிரணவத்திற்கு தன் தந்தையான ஈசனுக்கு விளக்கம் சொன்னதால் தகப்பன்சாமி எனப் பெயர் பெற்றார் முருகன்.
ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்த ஆறு தீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் உள்ள ஆறு தாமரை மலர்களில் விழுந்து, ஆறு குழந்தைகளாகி, உமையன்னையால் ஆறுமுகங்களுடன் ஓர் உருவம் பெற்றதால், ஆறுமுக சுவாமியானார்.
ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்று முருகப்பெருமானைப் போற்றுவர்.
சூரபத்மனை வதைத்து, அதற்குப் பரிசாக தேவேந்திரன் மகளான தேவயானையை மணந்து, தேவர்கள் சேனைக்கு அதிபதியானான் முருகன். அதனால் அவரை தேவசேனாதிபதி என்றும் தேவசேனா பதி என்றும் வணங்குகின்றனர்.
திருமாலின் மருமகனாய் முருகப்பெருமான் போற்றப்படுவதால் மால் மருகன் என்றும் அவரை அழைப்பர்.
விநாயகப் பெருமானின் சகோதரனாதலால் முருகப்பெருமான் விக்னேஸ்வரானுஜன் என்றும் அழைக்கப்படுகிறார்.
உமையன்னையான கௌரியின் திருவயிற்றில் பிறந்ததால் கௌரீகர்ப்பஜாதன் என்றும் முருகப்பெருமானுக்கு ஒரு திருநாமம் உண்டு.
விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்று முருகனை வணங்குவர்.
சேவற் கொடியைக் கொண்டதால் குக்குடத்வஜன் என்று முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.
ஈசனின் நெற்றிக்கண்களில் தோன்றிய அக்கினியிலிருந்து உதித்ததால் அக்கினிகர்ப்பஜான் என்றும் முருகப்பெருமான் வணங்கப்படுகிறார்.
தண்டம் எனும் ஆயுதத்தை ஏந்தியருளும் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாய் பக்தர்கள் துயரங்களை விரட்டி அருள்புரிகிறார்.
வேதங்கள் ‘சுப்ரம்மண்யோம், சுப்ரம்மண்யோம், சுப்ரம்மண்யோம்’ என்று முருகப் பெருமானையே மும்முறை போற்றுகின்றன. அவ்வளவு ஞானம் கொண்டவன் முருகன். அதனால் அவனை ஞானபண்டிதன் என்று அழைப்பர்.
நம் மனம் குகை போன்றது. குகை எப்போதும் இருண்டிருக்கும். அந்த இருட்டில் ஜோதியாக முருகன் தோன்றுவதால் அவனுக்கு குகன் என்றும் பெயர்.
ஆறுமுகப்பெருமான் பன்னிரு கைகளும் கண்களும் கொண்டு அருள்வதால் த்வாதசநேத்ரபாஹு என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

Leave a Reply