எந்த நாள்… உகந்த நாள்?

eternity-time

இந்து சாஸ்திரத்தில், மனிதன் ஒருவன் பிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இறப்புக்குப் பின்னும் அவை தொடரும். இதுபோன்ற சடங்குகளையும், நாம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் விஷயங்கள், வீடு கட்டுவது, தொழில் துவக்கம் முதலான நற்காரியங்களையும் உரிய நாட்களைத் தேர்வு செய்து அன்று ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன ஞான நூல்கள். அவை தரும் விளக்கங்களின்படி, எந்தெந்த விஷயங்களை எந்தெந்த நாட்களில் நிகழ்த்தலாம் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

குழந்தைக்கு எப்போது பெயர் சூட்டலாம்?

தந்தை குழந்தையின் பெயரை அதன் காதில் மூன்று முறை கூறவேண்டும். அப்போது உறவினர்கள் அதை திரும்பச் சொல்ல வேண்டும். அந்த தருணத்தில் குழந்தையின் உள்ளங்கையில் தங்கக்காசு ஒன்றை வைப்பார்கள். குழந்தை பிறந்து 10, 11, 12 அல்லது 16-ம் நாளில் பெயர் சூட்டலாம்.

பெயர் சூட்டுவதற்கு உகந்த சுப கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி.

திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14-வது திதிகள்) அஷ்டமி தவிர மற்றவை.

நட்சத்திரம்: சர, ஸ்திர, துரித, சாது நட்சத்திரங்கள் முறையே புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சமயம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அசுவினி, பூசம், அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை, அனுஷம் அல்லது ரேவதி சிறந்தவை.

யோகம்: விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வ்யாகாதம், வஜ்ரம், வ்யதிபாதம், பரிகம் மற்றும் வைதிருதி தவிர பிற யோகங்கள் சிறந்தவை.

காரணம்: சகுனி, விஷ்டி தவிர பிற காரணங்கள் சிறந்தவை.

மேற்கண்ட யோகம் மற்றும் கரணம் அனைத்தும் சுப காரியங்களுக்கும் விலக்கப்பட்டவை. இவை தவிர மற்ற யோகங்கள், கரணங்கள் மற்றும் கிழமைகள் சிறந்தவை. மேலும் மேற்கண்ட பஞ்சாங்க விஷயங்கள் அல்லாமல் சடங்கு வைக்கும் நாளில் பஞ்சக சுத்தி, ஜாதகரின் ஜாதகத் தன்மை, கிரகண தோஷங்கள், சங்கராந்தி மற்றும் சந்தியாகாலம் போன்றவற்றையும் கவனித்து முகூர்த்தம் குறிக்கவேண்டும்.

அன்ன ப்ராசனம் எப்போது?

இது குழந்தைக்கு முதல் முறையாக திட உணவு ஊட்டும் சடங்கு. ஆண் குழந்தைக்கு 6, 8 அல்லது 10-வது மாதங்களிலும், பெண் குழந்தைக்கு 5, 7, 9 அல்லது 11-வது மாதங்களிலும் இந்தச் சடங்கை செய்யலாம்.

திதி: 2, 3, 5, 7, 10, 13 அல்லது பவுர்ணமி சிறந்தது.

நட்சத்திரம்: அனைத்து சர, சாது, ஸ்திர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.

முடி காணிக்கை எப்போது செலுத்தலாம்?

இது முதல்முறையாக முடி காணிக்கை செலுத்தும் சடங்கு ஆகும். இதை நிகழ்த்துவதற்கு 2, 3, 5, 7, 10, 11 அல்லது 13-ம் திதி சிறந்தது.

நட்சத்திரம்: சர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.

காது குத்துதல்

திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14) 8 மற்றும் அமாவாசை தவிர மற்றவை.

நட்சத்திரம்: சாது, துரித நட்சத்திரங்கள், புனர்பூசம், திருவோணம் மற்றும் அவிட்டம் சிறந்தவை.

புத்தாடை அணிய உகந்த நேரம்…

திதி: ரிக்தா திதிகள் மற்றும் அமாவாசை தவிர மற்றவை.

நட்சத்திரம்: சர, ஸ்திர, சாது, துரித மற்றும் விசாகம் சிறந்தவை.

பிறந்த நாள் கொண்டாட்டம்: நாம் பிறந்த ஆங்கி தேதி அல்லது தமிழ் தேதியில் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது. நாம் பிறந்த சந்திரமான மாதம் மற்றும் நட்சத்திர நாளில்தான் பிறந்தநாள் கொண்டாடவேண்டும்.

பஞ்சாங்கங்களில் சைத்ர, வைசாக, பால்குன என சந்திரமான மாதங்களைக் காணலாம். தமிழ் வருட பங்குனி மாத அமாவாசை முடியும் நேரத்தில் சந்திரமான சைத்ர மாதம் தொடங்கும். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அமாவாசைகளில் அடுத்தடுத்த மாதங்கள் தொடங்கும். இந்த சந்திரமான மாதத்தையும் ஜனன நட்சத்திரத்தையும் ஜாதகரின் ஜாதகத்தில் குறித்துத் தருவது புண்ணியமாகும். சில நேரங்களில், ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டு ஒரே பெயரில் இரண்டு சந்திரமான மாதங்கள் ஏற்பட்டுவிடும். இதில் முதல் மாதத்தை அதிக மாதம் என்றும், மற்றொன்றை நிஜ மாதம் என்றும் சொல்வர். இந்நிலையில் நிஜமாதத்தில் வரும் ஜனன நட்சத்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.

மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். நமது ஜனன நட்சத்திரம் முதல் நாள் தொடங்கி மறு நாள் வரை இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், எந்த நாளில் சூரிய உதயம் முதற்கொண்டு 2 மணி, 24 நிமிடங்கள் வரை ஜனன நட்சத்திரம் உள்ளதோ, அந்த நாளில் பிறந்தநாள் கொண்டாடவேண்டும். பிறந்தநாள் விழா, வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. அந்த விண்ணுக்கும் நம் உயிருக்கும் உள்ள தொடர்பை புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சடங்கு. இந்த நாளில் பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெறுதல், புனித இடங்களுக்குச் சென்று வருதல், தான தர்மம் செய்தல், பறவைகள், விலங்குகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு தானம் வழங்குதல் போன்ற தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் வயிறும் மனமும் குளிர்ந்தால், நமது வாழ்வும் வளமும் வளரும் என்பது உறுதி. மேலும் இந்நாளில் விநாயகர் பூஜை, விஷ்ணு பூஜை, பகவதி சேவை செய்ய வேண்டும். மாணவர்கள் சரஸ்வதி பூஜை, வித்ய கோபால மந்திர அர்ச்சனை, மிருத்யுஞ்ஜெயன பூஜை செய்ய வேண்டும். பிறந்த நாள் இன்னின்ன கிழமைகளில் அமைந்தால் இன்னின்ன பலன்கள் என்றொரு கருத்து உண்டு.

ஞாயிறு: நீண்ட தூர பயணம்

திங்கள்: நல்ல உணவு கிடைத்தல், தான்ய விருத்தி

செவ்வாய்: உடல் நலம் பாதித்தல்

புதன்: கல்வியில் ஆர்வம்

வியாழன்: ஆடை- ஆபரணச் சேர்க்கை

வெள்ளி: அனைத்து வழிகளிலும் அதிர்ஷ்டம்.

சனி: பெற்றோருக்கு பாதிப்பு.

பிறந்த நாளில் உபநயனம், திருமணம், மருத்துவ சிகிச்சை, முதலியவற்றை செய்யக் கூடாது. பிறந்தநாள் எந்த கிழமைகளில் அமைகிறதோ அந்த கிழமைக்கு உரிய கிரகத்தை வழிபட, குறைகள் நீங்கி நிறைகள் கூடும்.

வித்யாரம்பம்

திதி: ரிக்தா திதிகள், 8 மற்றும் 15 தவிர மற்றவை சிறந்தவை.

நட்சத்திரம்: சர, சாது, துரித நட்சத்திரங்களும் ரோகிணி, திருவாதிரை, உத்திரம் மற்றும் விசாகமும் சிறந்தவை.

விற்பனை மற்றும் வர்த்தகம் குறித்த விவரங்கள்

மிகப்பெரிய அளவில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிடல் மற்றும் செயல்படல், ஒப்பந்தங்களில் கையெழுத்திடல், விளம்பரப்படுத்துதல் போன்றவற்றையும் உரிய திதி, நட்சத்திரங்களில் துவங்குவது விசேஷம்.

திதிகள்: 1, 2, 3, 5, 7, 10, 11, 13 மற்றும் பவுர்ணமி சிறந்தது.

நட்சத்திரம்: சாது, துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.

புதிதாக கடை திறப்பதற்கு, ரிக்தா மற்றும் கிருஷ்ணபட்ச அஷ்டமி தவிர மற்ற திதிகள் சிறந்தவை. சாது, துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.

மருத்துவம்…

ஜனன நட்சத்திரம் அல்லது அதற்கு 3, 5 அல்லது 7-வது நட்சத்திர தினங்களில் (ஜன்ம, விபத்து, ப்ரத்யக், வதம்) உடல்நலம் பாதித்தால் மிக கவனத்துடன் சிகிச்சை பெற வேண்டும்.

பய மற்றும் உக்கிர நட்சத்திர நாட்களில் உடல் நலம் பாதிக்கக் கூடாது. மேலும் மேற்படி நட்சத்திர நாட்களுடன் சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமையும் அமைந்துவிட்டால் மிகவும் எச்சரிக்கையுடன் சிகிச்சை பெற வேண்டும். நாட்பட்ட பிணிகளுக்கு சர, ஸ்திர, சாது மற்றும் துரித நட்சத்திரங்களில் சிகிச்சை பெற துவங்குவது சிறப்பு.

வழக்கு தொடுத்தல்

உரிமையை நிலைநாட்டுவதற்காக வழக்குகள் தொடுக்கும் அன்பர்கள் ரிக்தா திதி தவிர மற்ற திதிகளைத் தேர்வு செய்யலாம். சாது, துரித, ஸ்திர நட்சத்திரங்கள், ரோகிணி, உத்திரம், அவிட்டம் சிறந்தவை.

கடன் வாங்குதல்

நல்ல காரியங்களுக்காகவும், தவிர்க்க இயலாத தேவைகளுக்காகவும் கடன் வாங்கும்போது ரிக்தா திதி தவிர மற்ற திதிகளில் அணுகலாம். கார்த்திகை, புனர்பூசம், மூலம், அவிட்டம் தவிர மற்றவை சிறந்தவை. ஜனன நட்சத்திரம் ஆகாது.

வீடு பழுது பார்க்க…

திதி: ரிக்தா திதி தவிர மற்றவை சிறந்தவை

நட்சத்திரம்: கார்த்திகை, பூசம், மகம், பூரம், அஸ்தம், மூலம் மற்றும் ரேவதி தவிர மற்றவை. மேலும் கோச்சாரத்தில் மேற்படி நட்சத்திரங்களில் செவ்வாய் பயணிக்கும் காலமும் ஆகாது.

வெள்ளிக்கிழமையில் ரிஷபம் அல்லது துலாம் லக்னம்; திங்கள் கிழமையில் கடகம் லக்னம் அமையும் நேரத்தில் பழுது பார்க்கத் தொடங்க வேண்டும்.

பயணம் வெற்றி பெற…

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாட்களில் பயணத்தைத் தவிர்க்கவும். மேலும் செவ்வாய், புதன் கிழமைகளில் வடக்கு திசையும்; திங்கள், சனியில் கிழக்கும்; வியாழனன்று தெற்கும்; ஞாயிறு, வெள்ளியில் மேற்கும் ஆகாது.

Leave a Reply