முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பதவியிழந்த பின்னர், அவர் மீண்டும் பதவியை பெற வேண்டி பல்வேறு தரப்பினர் பல வேண்டுதல்களை செய்துவரும் நிலையில் பிரபல கராத்தே வீரர் ஹுசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் எட்டு அடி உயரம், ஆறு அடி அகலம், 300 கிலோ எடையில் சிலுவையில் காலை 11.40 மணியளவில் சிலுவையில் இரண்டு கைகள் மற்றும் கால்களிலும் ஆணி அடித்து தனது வேண்டுதலை செய்ய தொடங்கினார்.
முதலில் கால்களில் தனக்குத்தானே ஆணியை ஹூசைனி அடித்துக் கொண்டார். அதன்பின்னர் அவரது மாணவர்கள், ஹூசைனியின் இரண்டு கைகளிலும் ஆணியை அடித்து சிலுவையை தூக்கி நிறுத்தினர். சுமார் 7 நிமிடம் சிலுவையில் நின்ற படி ஜெயலலிதா மீண்டும் பதவியை பெற வேண்டி வேண்டுதல் செய்த அவர் 11.47 மணிக்கு சிலுவையில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஹூசைனி செய்தியாளர்களிடம் கூறியபோது, “உலகிலேயே அதிக வலியை கொடுக்கக்கூடியது சிலுவையில் அறைவதுதான். அதுவும் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்ளும் போது இன்னும் அதிகமான வலி ஏற்படும். அந்த வலியுடன் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக நிறைவேறும். என்னுடைய மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கப்பதக்கங்களை வாங்க வேண்டும் என்றால், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால்தான் முடியும்.
உலகிலேயே முதல் முறையாக தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்ள இருக்கிறேன். இதற்கு முன்பு 4 நாகப்பாம்புகளை கையில் விட்டு கடிக்க வைப்பது, நெருப்பில் இருந்து வெளியே வருவது என பல்வேறு சாதனைகளை செய்துள்ளேன்.
அதனால் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்வது பெரிய விஷம் இல்லை. இதற்கு காவல்துறை அனுமதி தேவையில்லை. அதனால் நான் காவல்துறையிடம் அனுமதி வாங்கவில்லை” என்றார்.