சகாயம், ஐ.ஏ.எஸ். மிகுந்த பாதுகாப்போடு இருப்பது நல்லது. கருணாநிதி

karunaidhiதமிழகத்தில் நடந்த கிரானைட் ஊழல் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபத்துக்கள் இருப்பதால் அவர் மிகுந்த பாதுகாப்போடு இருப்பது நல்லது என திமுக தலைவர் கருணாநிதி அறிவுரை கூறி கேள்வி-பதில் அறிக்கையில் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தினந்தோறு முரசொலியில் தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் கூறும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்த அறிக்கையில் அவர் இன்று தெரிவித்துள்ளதாவது:

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் கிரானைட் முறைகேடுகள் குறித்து தகவல் தந்தவர் தாக்கப்பட்டிருக்கிறாரே?

பதில்: அதிகாரி சகாயம், ஐ.ஏ.எஸ். கூட மிகுந்த பாதுகாப்போடு இருப்பது நல்லது என்பதுதான் என்னுடைய கருத்து. அரசு அவருக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

கேள்வி: பன்றி காய்ச்சல் மரணம் பெருகி கொண்டு வருவதாகவும், ஆனால் சென்னை மாநகராட்சி அந்த எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாகவும் சொல்லப்படுகிறதே?

பதில்: சென்னையில் பன்றி காய்ச்சல் வேகமாகத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் அளவுக்குப் பரவி வருவதாகவும், இது குறித்த தகவல்களை முறையாக வெளியிட மாநகராட்சி முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருவர் மட்டுமே இதனால் இறந்திருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், கடந்த 17 ஆம் தேதி நிலவரப்படி, அடையாறு மண்டலத்தில் ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த வஜ்ரவேல், வேளச்சேரியைச் சேர்ந்த ஜெயந்தி ஆகியோர் பன்றி காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள்.

அதிகாரப்பூர்வ தகவல் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்த போதிலும், சுமார் ஐம்பது பேர் தமிழகத்திலே பன்றி காய்ச்சலுக்கு பலியாகி இருக்கக்கூடும் என்று கூறுகிறார்கள். தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இதிலே கவனம் மேற்கொண்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசியினை வழங்கி, பன்றிக் காய்ச்சலே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்காக போதிய அக்கறை செலுத்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறதே?

பதில்: தி.மு.க. ஆட்சியில் 2008-2009 ஆம் ஆண்டில் 289.88 கோடி ரூபாய் செலவில் 50 நகர்ப்புற குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2012-2013 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 15.77 கோடி ரூபாய் செலவில் 7 நகர்ப்புற குடிநீர்த் திட்டங்கள் தான் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

கிராம அளவில் உள்ள திட்டங்கள் என்று பார்த்தால் கூட, கிராமப்புற மக்களுக்கு குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 40 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். தமிழகத்திலே உள்ள மொத்தம் 98 ஆயிரத்து 179 குடியிருப்புகளில், 40 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொடுக்கப்படுவது 76 ஆயிரத்து 704 குடியிருப்புகளுக்கு மட்டுமே.

மீதமுள்ள 21 ஆயிரத்து 475 குடியிருப்புகளுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. இந்த விவரங்களை நான் கூறவில்லை. தமிழக அரசின் புள்ளி விவரத் துறை தயாரித்து கொடுத்துள்ள 2014-ம் ஆண்டுக்கான புத்தகத்திலே காணப்படும் விவரங்கள்தான் இவை.

கேள்வி: எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோவை வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து எடுத்து சொல்லியும், அ.தி.மு.க. அரசினர் கேளாக் காதினராக உள்ளனரே?

பதில்: மாணவர்களின் எண்ணிக்கை குறைவுதானே என்று அலட்சியமாக இராமல், அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்தால் நமக்கென்ன லாபம் என்று கருதாமல், உடனடியாக அவர்களின் கோரிக்கைக்கு முடிவு கண்டு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply