சட்டசபை காவலர்களை தாக்கிய வழக்கு. தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு முன் ஜாமீன்.

highcourtகடந்த 19ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றபோது தேமுதிக கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற சிறப்பு துணை ஆய்வாளர் இரண்டு பேர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

இதுகுறித்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், ‘தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற போது, எங்கள் கட்சித் தலைவர் பற்றி ஆளுங்கட்சியினர் தரக்குறைவாகப் பேசினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எங்கள் கட்சி எம்.எல்.ஏ. மோகன்ராஜை சட்டப் பேரவையிலிருந்து வெளியேற்றுமாறு பேரவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இதற்கு தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். உடனடியாக எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு பேரவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து வலுக்கட்டாயமாக எங்களை காவலர்கள் வெளியேற்றினர். இதில், எங்களுக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சிறப்பு துணை ஆய்வாளர் விஜயனை நாங்கள் தாக்கியதாக எங்கள் மீது சென்னை கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் எங்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகார் வேண்டுமென்றே எங்கள் மீது அளிக்கப்பட்ட புகாராகும். எனவே, எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தனர்

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது, தேமுதிக எம்.எல்.ஏக்கள் இருவரும் தலா ரூ. 15 ஆயிரமும் அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதமும் அளித்து முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்பு திங்கள், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Leave a Reply