ஜெயலலிதாவின் குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபிக்காவிட்டால் கடும் நடவடிக்கை. பவானிசிங்கிற்கு நீதிபதி எச்சரிக்கை

bhavani singhமுன்னாள் தமிழக  முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆதாரங்களுடன் தன்னுடைய வாதத்தை தொடராவிட்டால் அவரது பணியை நீதிமன்றமே செய்யவேண்டிய நிலை ஏற்படும் என பவானி சிங்குக்கு கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்ததால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு  வழக்கு கடந்த சில நாட்களாக கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா உள்பட குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் சார்பில் ஏற்கனவே வாதம் முடிவடைந்த நிலையில் நேற்று அரசு தரப்பு வாத‌த்தை தொடங்குமாறு அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு நீதிபதி உத்தர விட்டார். ஆனால் பவானி சிங், “இறுதிவாதம் செய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை நீதிபதி ஏற்கவில்லை.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதிவாதத்தை நேற்றே தொடங்கினார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவின் (அரசு தரப்பு சாட்சி எண் 255) சுமார் 400 பக்க வாக்குமூலத்தை அவர் வாசித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீது எதன் அடிப்படையில் ரூ.66.65 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என வழக்கு தொடுக்கப்பட்டது? கட்டிடங்கள் மதிப்பு எவ்வளவு? முடக்க‌ப்பட்ட நகைகளின் மதிப்பு எவ்வளவு? வழக்கு காலத்துக்கு முன்பு அவரது சொத்து மதிப்பு எவ்வளவு? எதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் சொல்ல முடியாமல் திண‌றிய பவானி சிங், “இது தொடர் பாக அனைத்து ஆவ‌ணங்களும், ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரிவான தகவல்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தான் கூற வேண்டும்”என்றார்.

இதையடுத்து நீதிபதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தத்திடம் கேட்டார். அதற்கு அவரும் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார். அதற்கு நீதிபதி, “உங்களுடைய கல்வி தகுதி என்ன, ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்”என கேள்வி எழுப்பினார்.

மேலும் நீதிபதி பேசும்போது, “அரசு வழக்கறிஞரான பவானி சிங் ரூ.66.65 கோடி சொத்து மதிப்பை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.அதில் ஒவ்வொரு பைசாவுக்கும் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். தக்க ஆதாரத்துடன் கணக்குக் காட்டி நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும். அரசு வழக்கறிஞர் ஆதா ரத்துடன் வாதிடாவிட்டால் அவரது பணியை நீதிமன்றமே செய்யும்.

குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரம், அவற்றின் மதிப்பு உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வாதிட வேண்டும். இல்லையென்றால் அரசு வழக்கறிஞரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.மேலும் தீர்ப்பின் போது அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் செயல்பாடுகள் குறித்து கடும் தண்டனை தெரிவிப் பேன். அது உங்களது (பவானி சிங்) எதிர்காலத்தை பாதிக்கும்”என்றார். இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப் பட்டது.

Leave a Reply