பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் நிறுவனம் வாங்கிய கடனுக்காக அவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எஸ்.பி.ஐ. வங்கி அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் விமான போக்குவரத்து நிறுவனம் கடந்த சில மாதங்களாக மிக மோசமான நஷ்டத்தை சந்தித்தது. இதனால், அந்நிறுவனம் சார்பில் எஸ்.பி.ஐ. வங்கியில் வாங்கப்பட்ட ரூ.6,800 கோடி ரூபாய் கடன் திரும்ப செலுத்தப்படாமல் இருந்தது.
பலமுறை வங்கி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் இதுகுறித்து எவ்வித பதிலும் தாக்கல் செய்யாததால் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய எஸ்.பி.ஐ, மும்பை உள்நாட்டு விமான நிலையம் அருகே கிங்பிஷர் நிறுவனத்துக்கு சொந்தமான 17 ஆயிரம் சதுர அடி கொண்ட கட்டடத்தை இன்று பறிமுதல் செய்துள்ளது. அந்த கட்டடத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி அளவுக்கு இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.