சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக மின் கட்டணத்தை குறைத்து அம்மாநில மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளதாகவும் விரைவில் மற்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவித்த மின்கட்டண குறைப்பு அறிவிப்பில் மாதமொன்றுக்கு 400 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் 50% குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதுமட்டுமின்றி பொதுமக்கள் மகிழ்ச்சியடையும் மற்றொரு அறிவிப்பையும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மாதம் 20,000 லிட்டர்கள் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் திட்டம் மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் 20,000 லிட்டருக்கு மேல் பயன்படுத்தும் தண்ணீருக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச தண்ணீர் பெறுபவர்கள் கழிவுநீரகற்றக் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது..