உலகின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன் தினம் இந்த இணையதளம் இயங்க முடியாமல் பல மணி நேரம் இருந்ததாகவும், இந்த இணையதளத்தை ‘லிஸர்ட் ஸ்குவாட்’ என்ற அமைப்புதான் முடக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த அமைப்பு லெனாவோ இணையதளத்தை ஹேக் செய்துள்ளதாக பொறுப்பேற்றுள்ளது.
லெனோவா இணையதளத்தின் வழக்கமான மெயின் பக்கத்தில் அத்துமீறி உள்ளே புகுந்த ஹேக்கர்கள், அதில் இளம்பெண்களின் ஆபாச படங்களை பதிவு செய்துள்ளனர். இதனால் பல மணி நேரத்துக்கு அந்த இணையதளத்தை அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதன்பின்னர் தீவிர முயற்சிக்கு பின்னர் சில மணி நேரம் கழித்து லெனோவா இணையதளம் வழக்கம்போல இயங்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஹேக்கிங் நடவடிக்கை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்காத லெனோவா நிறுவனம், “தடங்களுக்கு வருந்துகிறோம்” என்று 9 மொழிகளில் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.