திருமணத்திற்கு பின்னர் ஆண்கள் அல்லது பெண்கள் வேறொரு நபருடன் உறவு கொண்டால் சட்டப்படி அது தவறில்லை என தென்கொரிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அந்த நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்கொரியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ வேறொருவருடன் உறவு கொண்டால் கடும் குற்றமாக கருதப்பட்டு அந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த நாட்டு மக்கள் நடைமுறை வாழ்க்கையில் வேறொரு நபருடன் உறவு கொள்ளும் வழக்கம் அதிகரித்து வந்ததால் இதுகுறித்த வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிக வேலைப்பளு இருந்தது.
மேலும் அந்நாட்டு வழக்கறிஞர் ஒருவர் கணவர், மனைவி தவிர்த்து மற்றொருவருடன் உறவு வைத்துக்கொள்வது குற்றம் என்னும் சட்டத்துக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி பார்க் ஹான் சல் தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், 2 நீதிபதிகளின் எதிர்ப்புக்கிடையே 7 நீதிபதிகள், முறைகேடான பாலுறவு கிரிமினல் குற்றம் இல்லை என தீர்ப்பு அளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு மோசமாகி வரும் வாழ்க்கை முறையை இன்னும் மோசமாக்கிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர். இருப்பினும் ஏராளமானோர் இந்த தீர்ப்பை வரவேற்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்துள்ளனர்.