பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோர்களுக்கு தேர்வுப் பணிகளுக்கான கையேடு வழங்கப்பட்டது.
அரசு தேர்வுப்பணிகளில் ஈடுபடும் பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகள் ஆகியோர் பங்கு பெற்ற இந்த கூட்டம் முடிந்தவுடன் திடீரென மாலையில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கையேட்டில் இருந்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை சிறிதும் எதிர்பாராத சி.இ.ஓ.க்கள், டி.இ.ஓ.க்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அதிகாரிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்த தேர்வில் கலந்து கொண்டதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.
வழக்கமாக கையேடுகளை அதிகாரிகள் முழுவதுமாகப் படித்துப் பார்ப்பதில்லை. எனவே, அனைவரும் இந்தக் கையேடுகளைப் படித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தத் தேர்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.