பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் முழுமையான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று காலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் ஜெட்லியின் இன்றைய பொது பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு வரம்பு உயர்வு, மானியங்கள் 20 சதவீதம் குறைப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பான பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்ததை தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 23 ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி உள்ளது. பொது பட்ஜெட் என்றாலே அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், இறக்கம், வருமான வரி விலக்கு வரம்பு போன்றவை முக்கியத்துவம் பெறும். விலைவாசி கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளனவா என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மானியத்தை 20 சதவீதம் குறைப்பது, ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு கேஸ் மானியம் ரத்து செய்வது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
சமையல் கேஸ் மானியம் தற்போது வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதேபோல் உரம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களும் வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.
ராணுவம், உயர் கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. கிராமப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, நவீன மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.