சமீபத்தில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வெகு சொற்பமான வாக்குகளை பெற்று தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து பாஜக கூட்டணியை தமிழகத்தில் வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது. ஆனால் தமிழக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நடவடிக்கைகள் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதைத்தான் காட்டுவதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர்.
பாஜக கூட்டணியில் உள்ள பாமக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் அதிருப்தியான தேமுதிக, சமீபத்தில் சுதீஷ் பாஜக தேசிய தலைவர் அமீத்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தை அறிவிக்காவிட்டால், தேமுதிக சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை வரும் என கூறியுள்ளாராம்.
ஆனால் சுதீஷிடம் அமீத்ஷா எவ்வித வாக்குறுதியும் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். மேலும் பாஜகவின் தமிழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘நாங்கள் தற்போது உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக இருக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே கூறியவாறு, கோடி உறுப்பினர்களைச் சேர்ப்போம், தமிழகத்தில் மோடி ஆட்சியை அமைப்போம் என்ற கொள்கையில் இருந்து மாறவில்லை. என்றார் உறுதியோடு.
எனவெ கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கட்சிகள் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருக்குமா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.