ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த் டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறியாக இருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கும் மக்கள் ஜனநாயக கட்சிக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து முப்தி முகமது சயீத் நேற்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
மொத்தமுள்ள 87 தொகுதிகளில், மக்கள் ஜனநாயக கட்சி 28 தொகுதிகளிலும், பா.ஜ.க. 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. மேலும் தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12, மற்ற கட்சிகள் சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றனர்.
ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், முப்தி முகமது சயீது தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு கட்சியின் தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை அடுத்து மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க. ஆகியவற்றின் 25 பேர் கொண்ட கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று காஷ்மீரில் பகல் 11 மணிக்கு நடந்தது. ஜம்மு பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில், 79 வயதான மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முப்தி முகமது சயீது காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.
மேலும், பா.ஜ.க.வை சேர்ந்த நிர்மல் சிங் துணை முதல்வராகவும், மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 12 பேர், பா.ஜ.க.வை சேர்ந்த 12 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் காஷ்மீர் கவர்னர் என்.என்.வோரா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, முரளிமனோகர் ஜோஷி, ஹரியானா முதல்வர் கத்தார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய முதல்வராக பதவியேற்ற முப்தி முகமது சயீத் உள்பட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்