ஜம்மு காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்ததற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் காரணம் என நேற்று முன் தினம் பதவியேற்ற காஷ்மீர் மாநில முதல்வர் மும்ப்தி முகமது சயீப் கூறிய கருத்தின் காரணமாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நேற்று மக்களைவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் பெரும் பரபரப்புடன் இயங்கியது.
நேற்று முன் தினம் ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற முஃப்தி முகமது சயீது, காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் சுமுகமாக நடைபெற்றாதற்கு பாகிஸ்தானும், அங்குள்ள பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளான ஹுரியத் அமைப்பினருமே காரணம் எனத் கூறியிருந்தார். இந்தக் கருத்தை பிரதமர் நரேந்திர மோடியிடமும் தான் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். காஷ்மீர் முதல்வரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த விவகாரம் நேற்று பெரும் பிரச்சனையாக வெடித்தது. மக்களவையில், காஷ்மீர் முதல்வர் சயீதின் கருத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருடன் பேசியதாக சயீது தெரிவித்துள்ளார். இது மிகவும் முக்கிய விவகாரம் ஆகும். சயீது செய்தியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் நிர்மல் சிங் உடனிருந்தார். ஆனால், சயீதின் கருத்து குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 6 கிராம பஞ்சாயத்து தலைவர்களை பயங்கரவாதிகள் கொலை செய்தனர். ராணுவச் சாவடிகள் மீது தற்கொலைப்படை தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதை, சுமுகமான சூழல் எனத் தெரிவிக்க முடியாது.
தேர்தல் சுமுகமாக நடந்ததன் பெருமை, மாநில மக்கள், பாதுகாப்புப் படையினர், தேர்தல் ஆணையத்தையே சேரும். இந்த விவகாரத்தில், பிரதமர் மௌனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது. சயீதின் கருத்தை மக்களவை கண்டிக்க வேண்டும். அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை. அவையின் மையப்பகுதிக்கு வந்து நின்று கோஷமிட்டபடி இருந்தனர்.
பின்னர், சயீதின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல் மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சாந்தாராம் நாயக் பேசியதாவது:
முதல்வராகப் பதவியேற்ற உடனேயே, தேச விரோதக் கருத்தை சயீது தெரிவித்துள்ளார். இது அவரது பதவிப் பிரமாணத்துக்கு எதிரானது. தேச விரோத சக்திகளுடன் அவர் கூட்டு வைத்திருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.
சயீதின் அமைச்சரவை சகாக்களில் ஒருவரது சகோதரர், பிரிவினை அமைப்பான ஹுரியத்தில் உள்ளார். அவரது மனைவி, பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தேர்தல் சுமுகமாக நடந்ததற்கு, தேர்தல் ஆணையமும், பாதுகாப்புப் படையினருமே காரணம். ஆனால், அதுகுறித்து சயீது எதுவும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்