உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருந்து வரும் டுவிட்டருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் இணையதளத்தின் நிறுவனருக்கும் அதன் ஊழியர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. டுவிட்டர் நிறுவனத்திற்கு தீவிரவாதிகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “”எங்கள் இயக்கத்தின் மீது நீங்கள் நடத்திவரும் சைபர் போர் உங்களுக்கே திரும்பும். எங்களது புனிதப் போர் உங்களோடு அல்ல என்று நாங்கள் முதலிலேயே கூறினோம். ஆனால் நீங்கள் அதனை ஏற்று நடக்கவில்லை. தொடர்ந்து எங்களுக்கு இடையூறு செய்து வருகிறீர்கள். இதனால் எங்களை முடக்க முடியாது. நாங்கள் திரும்பி வந்து கொண்டே இருப்போம்” என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே டுவிட்டர் நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.