மகாராஷ்டிர மாநில அரசு மாட்டிறைச்சிக்கு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு ஏராளமானோர் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநில அரசின் மாடுகளை இறைச்சிக்காக கொல்வது தடை செய்யபடும் சட்டத்திற்கு சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுமதி வழங்கினார். இந்த சட்டத்தின்படி மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் தற்போது அந்த மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும் எருமை இறைச்சிக்கு தடையில்லை என இந்த சட்டம் அறிவித்துள்ளது.
இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் மகாராஷ்டிரா மாநிலத்தில்ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளார்கள் என்றும் பிற இறைச்சிகளின் விலை உயரும் என்றும் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவருக்கு நன்றி. பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவேண்டும் என்ற எங்கள் கனவு இப்போது நிதர்சனம் ஆகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஃபேஸ்புக், டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவு செய்து வருகின்றனர்.