சித்தார்த் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

siddharth-actor-056நடிகர்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நடிகர் சித்தார்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

பாய்ஸ் படத்தில் அறிமுகமான நடிகர் சித்தார்த் அதன்பின்னர் ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, காவியத்தலைவன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் சித்தார்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் சேவை வரி குறித்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘கிராமியக் கலைஞர்கள், நாடக நடிகர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கு சேவை வரிச் சலுகை அளித்து, கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி மத்திய அரசு ஒரு ஆணை வெளியிட்டது.

ஆனால், இது போன்ற வரிச் சலுகை திரைப்பட நடிகர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நடிப்புத் தொழில் என்பது கிராமியக் கலைஞர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் ஒன்றாகத்தான் உள்ளது.

இந்த நிலையில், கிராமியக் கலைஞர்களுக்கு மட்டும் சேவை வரி விலக்கு அளிப்பது நியாயமற்றது. எனவே, திரைப்பட நடிகர்களுக்கும் சேவை வரிச் சலுகை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ கிராமியக் கலைஞர்களையும், திரைப்பட நடிகர்களையும் ஒன்றாகக் கருத முடியாது. திரைப்படங்கள் பெரும் முதலீட்டில் தயாரிக்கப்படுகிறது. நடிகர்கள் அதிகமான தொகையை ஊதியமாகப் பெறுகின்றனர்.

அதனால், கிராமியக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளை திரைப்பட நடிகர்கள் கோர முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும் அல்ல. பாராம்பரியக் கலைகளையும், கலாசாரங்களையும், கல்வியையும் பாதுகாப்பதற்காக குறிப்பிட்ட மக்களுக்கு சலுகை வழங்கலாம் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வரிச் சலுகையில் பாகுபாடு ஏதும் இல்லை. வழக்கு விசாரணையின் போது, கிராமியக் கலைஞர்கள் பெறும் சம்பளத்தை, நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்குப் பெறுவார்களா என மனுதாரரின் வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினோம்.

வரிச் சலுகை வழங்கியது குறித்து தவறாகப் புரிந்து கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதைத் தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

Leave a Reply