சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் உருவாகும் வால் போன்ற பகுதி தான் குடல் வால். இங்கு ஏற்படும் அழற்சியை தான் குடல் வால் அழற்சி என கூறுகிறோம். இது சிறிய சிவந்த வால் பகுதி போல இருக்கும். இது இவர்களுக்கு தான் ஏற்படும் என விதிவிலக்கெல்லாம் இல்லை. இது சாதாரணமாக யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இன்றைய மருத்துவ வளர்ச்சியில் இது மிகவும் எளிதான முறையில் அகற்றிவிடலாம். ஓரிரு நாட்களில் முடித்துவிட கூடிய சிகிச்சைகள் எல்லாம் குடல் வால் அழற்சிக்கு தற்போதைய உயர்தர மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. ஆனால், இவை எல்லாம் உங்களுக்கு குடல் வால் அழற்சி இருக்கிறது என முதலில் கண்டறியப்பட வேண்டும்.
அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
நீங்கள் முதலில் உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்பட்டுள்ளதா என அறிய வேண்டும். அப்போது தானே நீங்கள் மருத்துவரை அணுக முடியும். ஒரு வேலை நீங்கள் தாமதித்துவிட்டால் அந்த சிவந்த வால் பகுதி வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி உங்கள் குடல் பகுதியிலேயே அந்த குடல் வால் அழற்சியான சிவந்த வால் பகுதி வெடித்துவிட்டால், அது உயிருக்கே கூட ஆபத்தை உருவாக்கலாம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, முதலில் நீங்கள் குடல் வால் அழற்சிக்கான அறிகுறிகளை தெரிந்துக் கொள்ள வேண்டும்….
தொப்புள் வலி
உங்களுக்கு குடல் வால் அழற்சி (Apendicitis) ஏற்படவுள்ளது என்பதற்கான முதல் அறிகுறி உங்களது தொப்புள் பகுதியிலும் வயிற்றின் கீழ் வலதுபுறத்திலும் வலி ஏற்படும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் கீழ் வயிற்று பகுதியிலோ அல்லது வேறு வயிற்று இடங்களிலோ வழிகள் ஏற்படலாம் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.
தீவரமான வயிற்று வலி
தூங்க முடியாத அளவு, உங்களது வயிற்று பகுதியில் வலி ஏற்படும். இது சாதாரண வயிற்று வலி போல இருக்காது. மிகவும் வலி மிகுந்ததாய் இருக்கும்.
குளிர் காய்ச்சல்
உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான மற்றொரு அறிகுறியானது குளிர் காய்ச்சல், வயிற்று வலியுடன் சேர்ந்து 100 டிகிரி அளவில் குளிர் காய்ச்சலும் ஏற்படும்.
வாந்தி மற்றும் குமட்டல்
நீங்கள் என்ன உணவு சாப்பிட்டாலும் குமட்டல் ஏற்படுவது போல இருக்கும். மற்றும் அடிக்கடி வாந்தியும் வரும். இவ்வாறான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக தகுந்த மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
பசியின்மை
குடல் வால் அழற்சிக்கான மற்றுமொறு அறிகுறியாக பசியின்மை கூறப்படுகிறது. உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்படும் போது சரியாக சாப்பிட தோன்றாது. வயிறு பகுதியில் எப்போதும் சூடாகவும், உப்புசமாகவும் இருப்பது போல உணர்வுகள் ஏற்படும்.
வயிற்று போக்கு
வயிற்று வலி மட்டுமில்லாது, உங்களுக்கு குடல் வால் அழற்சி எற்பட்டால் வயிற்றுப்போக்கும் ஏற்படும். இது போன்ற அறிகுறிகள் ஒன்றாக தோன்றினால். நேரம் தாமதிக்காமல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
வாயுப்பிரச்சனை
உங்களுக்கு குடல் வால் அழற்சி எற்பட்டுள்ளதற்கான முக்கிய அறிகுறிகள் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளும் ஏற்படும். இதில் மற்றொரு அறிகுறியாக கூறப்படுவது வாயுப்பிரச்சனை. நீங்கள் எந்த வித வாயு நிறைந்த உணவுகளை அளவிற்கு அதிகமாய் சாப்பிடாவிட்டாலும் உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்பட்டிருக்கிறது என்றால் வாயுப்பிரச்சனை ஏற்படும்.
ஊசி குத்துவது போல வலி
ஒருசிலருக்கு அவர்களது தேகத்தில் ஊசிக்குத்துவது போல வலி ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கர்ப்பணி பெண்களுக்கும், இடுப்பு பகுதியில் வீக்கம் போன்ற அழற்சி ஏற்படுபவர்களுக்கு தான் இவ்வாறான வலி ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.