மிளகாய் நாம் அன்றாடம் உணவுக்கு சுவை சேர்ப்பதற்காக காரத்தை தருவதற்காக என்றுதான் அறிந்திருப்போம். மிளகாயில் உணவுப் பொருள்களோடு உன்னதமான மருத்துவப் பயன்களும் அடங்கியுள்ளன என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டோம்.
நாம் தெரிந்திராத மிளகாயின் வகைகள்: சாதாரண சமையல் மிளகாய், சிவப்பு மிளகாய், பச்சைமிளகாய், கொள்ளி மிளகாய், சீமை மிளகாய், காந்தாரி மிளகாய், சீனத்து மிளகாய், ஈரமிளகாய், சீமைபச்சை மிளகாய், ஊசி மிளகாய், ஈரமிளகாய், வெண்டுமிளகாய், குண்டு மிளகாய், கருங்குண்டு மிளகாய் என மிளகாயின் வகைகளை அகராதி கூறும்.
இவற்றுள் ஊசி மிளகாயை மிகவும் உறைப்பான மிளகாய் என்றும் நாம் சூரிய கிரணத்தினை உட்கொள்ளும் என்றும் கருங்குண்டு மிளகாய் ஆகாயத்தை நோக்கிக் காய்த்து சூரிய கிரணத்தைப் புசிப்பதால் மிகவும் உறைப்பாய் இருக்கும் என்றும் தமிழ் மருத்துவ அகராதி தெரிவிக்கின்றது.
மேற்கூறியவற்றுள் நாட்டு மிளகாய் மற்றும் பறவைக் கண் போன்ற உருவமுடைய சிறு மிளகாய் இரண்டுமே பெரும்பாலும் உணவுக்குப் பயன்படுகின்றன. அனைத்து மிளகாயின் இலைகளும் உணவாகப் பயன்படுகின்றன. மிளகாயின் இலையிலேயும் மருத்துவ குணங்கள் மலிந்துள்ளன. இலைகள் சற்று கசப்பு சுவையுடையவை. காயைப்போல உஷ்ணத் தன்மையைப் பெற்றவை அல்ல.
* மிளகாயில் ஒரு பெரிய இரசாயனப்பொடி பட்டியலே அடங்கி இருக்கிறது எனலாம். இவை அத்தனையுமே நோய் எதிர்ப்பு சக்தியைக் தருவதாகவும் ஆரோக்கியத்தினை அதிகரிக்கச் செய்வதாகவும் உதவுகின்றன.
* மிளகாயில் கேப்ஸைசின் என்னும் வேதிப்பொருள் மிகுந்துள்ளது. இதுவே மிளகாய் காரமானதாகவும் சுவாசத்தில் எரிச்சலூட்டும் தன்மை உடையதாகவும் இருக்கின்றது.
* இந்த கேப்ஸைசின் என்னும் சத்து நுண்கிருமிகளை அழிக்க வல்லது எனவும் புண்களை உண்டாக்கி புற்றுநோய்க்கு ஏதுவாகும் கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும், வலியைப் போக்கக் கூடியதாகவும், சர்க்கரை நோய்க்கு எதிரானதாகவும் விளங்குகிறது என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. மேலும் இது எல்.டி.எல் என்று குறிக்கப்பெறும் கெட்ட கொழுப்புசத்தைக் குறைக்கக் கூடியது என்றும் தெரிவிக்கின்றது. மிளகாயில் விட்டமின் சி சத்து அதிகமாக அடங்கியுள்ளது.
விட்டமின் சி சத்து கொல்லாஜென் என்று சொல்லப்பெறும் உடல் ஆரோக்கியத்துக்குவேண்டிய மிக முக்கியமான ஓர் சத்துக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. திசுக்கள் ஆரோக்கியம் பெற்று இரத்த நாளங்கள், தோல் உட்சுரப்பிகள், எலும்புகள் ஆகியவை செம்மை பெற இந்த கொலாஜன் என்னும் சத்து உபயோகமாகின்றது.
விட்டமின் சி செரிந்த உணவுப் பொருட்கள் தொற்று நோய்களைத் தடுத்து நிறுத்துகிறது. எலும்புகளுக்கு பலத்தை தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை குறிப்பாக புற்று நோய்க்கு காரணமாய் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது. மிளகாயில் விட்டமின் ஏ, ஃப்ளேவனாய்ட்ஸ் அதாவது பீட்டா கரோட்டின் ஆல்ஃபா கரோட்டின் போன்றவற்றிற்கு லூட்டின் சியாசாந்தின் மற்றும் கிரிப்டோ சாந்தின் போன்ற புத்துணர்வு தரும் வேதிப் பொருட்களும் வெகுவாக உள்ளன.
* காய்ந்த மிளகாய் வற்றலை நீரிலிட்டு கொதிக்கவைத்து குடிநீரிட்டு 2 அல்லது 3 வேளை உள்ளுக்குக் கொடுக்க மார்பு நோய், வயிற்று நோய், சீரணமின்மை, வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குமட்டல், வாந்தி ஆகியன குணமாகும்.
* மிளகாயை அரைத்து பசையாக்கி துணியின் மேல் தடவி வீக்கம் கண்ட இடத்தின் மேல் பற்றாகப் போட்டு வைக்க அந்த இடத்தில் கொப்புளங்கள் தோன்றி நீர்வெளியேறி வீக்கம் குறைந்து போகும்.
* மிளகாய் வற்றல் 2 அல்லது 3 எடுத்து பழைய மண் பாத்திரத்தில் இட்டு அதனுடன் சில துளிகள் நெய் விட்டு கருக்கி சுண்டைக்காய் அளவு கற்பூரம் சேர்த்து அதனுடன் 500மி.கி நீரும் சேர்த்து உடன் ஒரு கைப்பிடி அளவு நெற்பொரி சேர்த்து நன்கு காய்ச்சி இறக்கி வைத்துக் கொண்டு ஊழிப் பெருநோய் என்றும் காலரா என்றும் சொல்லப்படுகின்ற வாந்தியும் பேதியும் அடிக்கடி வந்து துன்புறுத்துகின்ற வேளையில் ஒரு அவுன்ஸ் அளவு உள்ளுக்குக் கொடுத்து வர விரைவில் அச்சுறுத்தும் வாந்திபேதி எனப்படும் காலரா நோய் குணப்படும்.
* மிளகாய் வற்றலை மைபோல அரைத்து அடிப்பட்ட காயங்களின் மீது வைத்துக் கட்ட காயங்கள் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறிவிடும். எரிச்சல் தருகின்ற துன்பத்தை சற்று பொருத்துக் கொண்டால் இம்மருத்துவ முறை வெகு விரைவில் குணம் தரக் கூடிய ஓர் முறை ஆகும்.
* காய்ந்த மிளகாயை அரைத்து தொண்டை மேல் பூசி வைக்க தொண்டைக்குள் எழும்பி துன்பம் தருவதாய் இருக்கும் கட்டிகள் உடைந்து குணமாகும்.
* நாட்பட்ட முதுகுவலி, பிடரி இசிவு என்கின்ற கழுத்து வலி, நாட்பட்ட வலி மற்றும் வீக்கங்கள் ஆகியவற்றுக்கு மிளகாயை பூண்டு மற்றும் மிளகோடு சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் கலந்து பூச மேற்சொன்ன நோய்கள் அத்தனையும் விலகி ஓடும்.
* மிளகாய் வற்றலுடன் பெருங்காயம், கற்பூரம் இரண்டையும் சேர்த்து எலுமிச்சை சாற்றால் அரைத்து சிறு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு வாந்தி பேதி என்னும் ஊழிப் பெரு நோய்க்குக் கொடுக்க விரைவில் குணம் தரும்.
* ஒரு மிளகாய் வற்றலோடு நீர் சேர்த்து தீநீராகக் காய்ச்சி எடுத்த நீரில் சிறிது இஞ்சிச் சாறு சேர்த்து உடலுக்கு தக்க அளவு கொடுக்க வயிற்றில் வாய்வு சேர்ந்து விளைந்த வயிற்று உப்புசம், கடுமையான வயிற்று வலி, செரியாமையால் ஏற்பட்ட மந்த நிலை அத்தனையும் மறைந்து போகும்.
* மிளகாய் பொடியுடன் சர்க்கரை சமன் சேர்த்து வேலம் பிசின் தூள் சேர்த்து உருண்டையாக செய்து வைத்துக் கொண்டு (சுண்டை அளவு) தேவையான போது வாயிலிட்டுச் சுவைக்க தொண்டைக் கம்மல், தொண்டைக் கட்டு குணமாகும்.
* சீமை மிளகாய், காந்தூரி மிளகாய், ஊசி மிளகாய் என்று சொல்லக் கூடிய சிறு மிளகாயை உள்ளுக்கு உபயோகப்படுத்துவதாலும், செரியாமை, மாந்தக் கழிச்சல், மார்பு நோய், கீல்வாதம் சூதக வலி என்னும் மாதவிடாய்க் காலவலி ஆகியன குணமாகும்.
* 200 கிராம் மிளகாய் தூளோடு 100கிராம் மிளகுத் தூள் சேர்த்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து தைல பதமாகக் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வர அனைத்து விதான தலை வலிகளும் தீர்ந்து போகும்.
* மிளகாயில் காரம் மிகுந்திருப்பினும் கனிவுடன் பல்வேறு நோய்களையும் அது போக்கவல்லது.