வீரமிகு இந்து மாநாட்டில் பங்குபெற பிரவீண் தொகாடியாவுக்கு தடை. பெரும் பரபரப்பு.

thogadiaகர்நாடக கடலோர பகுதிகளில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் காரணத்தால் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக காவல்துறை கூறியுள்ளது. கர்நாடக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாளை அதாவது மார்ச் 9ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி அருகேயுள்ள குஞ்சினபெட்டுவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பாக ‘வீரமிகு இந்து மாநாடு’, பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் நிலையில் பிரவீண் தொகாடியா உட்பட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள், மடாதிபதிகள் ஆகியோர்களும் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

இதுகுறித்து உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை நிருபர்களிடம் நேற்று கூறிய‌தாவது:

கடலோர கர்நாடகத்தில் இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்படும் பதற்றமான‌ சூழல் காணப்படுகிறது. இந்த சூழலில் பிரவீண் தொகாடியா உடுப்பி நிகழ்ச்சியில் பங்கேற்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே மார்ச் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை உடுப்பி மாவட்டத்துக்குள் அவர் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அனுமதியின்றி நுழைந்தாலோ,கூட்டத்தில் கலந்து கொண்டாலோ அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரவீண் தொகாடியாவின் பேச்சை ஒளிபரப்பவும் கருத்துகளை சிடி வாயிலாக விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply