ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் திப்பிலி

asthma_2334001f

நுரையீரலுக்குப் பிராண வாயுவை எடுத்துச் செல்லும் நாளங்களை வீங்கவும் சுருங்கவும் செய்வதன் மூலம், இழுப்பு, மூச்சுத் தடை, மார்பு இறுக்கம், இருமல் போன்றவற்றை ஆஸ்துமா நோய் ஏற்படுத்தும். மூச்சு செல்கிற பாதையில் ஏற்படுகிற அழற்சியே இந்த நோயை உண்டாக்குகிறது.

ஒருவருக்கு இந்த நோய் வந்தால், மூச்சு செல்லும் பாதையானது வீக்கம் அடைந்து, அந்தப் பகுதியில் உள்ள தசைகள் இறுகுகின்றன. இதனால் அங்குப் பிராண வாயு செல்வது குறைகிறது. ஒவ்வாமை, ஒவ்வாமை ஊக்குவிப்பான்கள் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

நாய் முதல் புகையிலை வரை

வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் முடி, தூசி, துகள்கள், வலி நிவாரண மாத்திரைகள், குளிர்ந்த காற்று, உணவு, உடற்பயிற்சி, பூ மகரந்தம், சளி, மன அழுத்தம், புகையிலையைப் பயன்படுத்துதல் போன்றவை இதற்குக் காரணங்கள். ஒரு சிலருக்குப் பரம்பரையாகவே ஒவ்வாமை இருக்கும். ஒவ்வாமையும், தோல் நோயும் சேர்ந்தும் வரலாம். சிலருக்கு நோயின் வேகம் அதிகரிக்கும். சிறிது காலம் நோய் இல்லாமல் இருக்கும். இருமல் வரும்போது சளி வரலாம், வராமலும் இருக்கலாம். மூச்சுத் தடை வரலாம். உடற்பயிற்சி செய்தால், மூச்சுத் தடை அதிகரிக்கலாம்.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு முகங்கள், உதடுகள் நீலமானாலோ, உணர்ச்சித் திறன் குறைந்தாலோ, மயக்கம் வந்தாலோ, நாடித் துடிப்பு மிக அதிகமாக இருந்தாலோ, மிகவும் பரபரப்புடன் காணப்பட்டாலோ, உடல் வியர்த்தாலோ, மூச்சு மாறுபட்டாலோ, மூச்சு இடையில் நின்றாலோ உடனே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.

கண்டறிதல்

ஸ்டெதஸ்கோப்பைப் பயன்படுத்தி ஆஸ்துமாவின் நிலையை ஓரளவு கண்டுபிடிக்கலாம். இப்போது மருத்துவர்கள் ரத்தத்தில் வாயுவின் அளவையும், மார்பக எக்ஸ்ரேயையும், நுரையீரல் செயல்பாட்டுப் பரிசோதனை (lung function test) போன்றவற்றையும் எடுக்கிறார்கள். இரண்டு விதமான முறைகளில் இதற்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1. உடனடி நிவாரணம் அளித்தல்.

2. மேற்கொண்டு இந்த நோய் வராமல் தடுத்தல்.

ஆஸ்துமாவுக்கு மூக்கின் வழியாக மருந்துவிடும் நஸ்யம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில மருந்துகள் வாயின் வழியாக உறிஞ்சப்படுகின்றன. ஸ்டீராய்டு மருந்துகளும் நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவது உண்டு. நுரையீரல் மூச்சு நாளங்களை விரிவடையச் செய்கின்ற bronchodilators-யையும் கொடுப்பதுண்டு. அபூர்வமான சில நிலைகளில் ஆக்ஸிஜனைச் செலுத்தவும், நரம்பு ஊசி போட வேண்டியும் வரலாம்.

கண்டறிந்து தவிர்த்தல்

எந்தெந்தக் காரணங்களால் தனக்கு ஆஸ்துமா தூண்டப்படும் என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு நோயாளி அவற்றைத் தவிர்க்க முடியும்.

Peak flow meter எனும் கருவி உள்ளது. இதன் மூலம் நாம் எவ்வளவு மூச்சுக் காற்றை வெளியிட முடியும் என்பது தெரியும். இதில் 50 முதல் 80 வரை நம்மால் செய்ய முடிந்தால் ஒரு மத்தியமான நிலையில் ஆஸ்துமா உள்ளது என்று அர்த்தம். 50-க்கு கீழ் இருந்தால் அதிகம் என்று அர்த்தம். இது ஒரு நாள்பட்ட நோய். உடற்பயிற்சி செய்ய இயலாமை, இரவில் தூங்க முடியாமல் போவது, நுரையீரல் பாதிக்கப்படுவது, தினமும் இருமிக்கொண்டே இருப்பது, நெஞ்சு வலி போன்றவை இடைஞ்சலாக இருக்கும்.

ஆயுர்வேதத்தில் மூச்சுவிடுதல், பிராண வாயுவையும் உதான வாயுவையும் சார்ந்து உள்ளது. நுரையீரல்- வாத, கபத்தின் இருப்பிடமாக உள்ளது. சீரான மூச்சு நாபிக் கமலத்தில் இருந்து உருவாகிறது. உடலில் அக்னி சீராக இயங்குதல், மலத் தடையின்றி இருத்தல், ஒத்துக்கொள்ளாத (அஹிதமான), அபத்தியமான உணவு வகைகளைச் சாப்பிடுதல்,

இனிப்பான, புளிப்பான, எண்ணெய்ப் பசையுள்ள தயிர், உளுந்து போன்ற உணவுகளைச் சாப்பிடுதல், ஓடுதல், தூசிகளுக்கு இடையே செல்லுதல், பிராணிகளுடன் விளையாடுதல், நீச்சல் குளத்தில் குளித்தல் போன்றவற்றாலும் ஆஸ்துமா உண்டாகும். மனச் சோகம், மனக் குழப்பம் போன்றவற்றைத் தவிர்ப்பது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

ஆஸ்துமாவுக்கு வாத, கபத்தைக் குறைக்கிற உஷ்ணமான மருந்துகளைச் சாப்பிட வேண்டும். வாதமும் குளிர்ச்சியானது, கபமும் குளிர்ச்சியானது. எனவே தசமூலக் கடுத்ரயம் கஷாயம், வியோஷாதி வடகம், தசமூல ரசாயனம், கற்பூரத் தைலத்தை நெஞ்சில் தடவுதல் போன்றவை சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இது தவிர நெய் மருந்துகளைக் கொடுத்து வாந்தி வரவைப்பது, பேதி மருந்து மூலம் சளியை வெளியேற்றுதல் என்ற பஞ்சகர்மா சிகிச்சைகளும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

எளிய மருந்துகள்

ஆஸ்துமாவுக்குத் திப்பிலி எனும் மருந்தின் அளவை கூட்டிக் கொடுப்பது ஒரு முக்கியமான சிகிச்சை. அத்துடன் சில எளிமையான கைமருந்துகளைப் பார்ப்போம்:

தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சு திணறல், ஆஸ்துமா, குளிர் காய்ச்சல் போன்றவை குறையும்.

முசுமுசுக்கைக் கீரையின் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியைத் தேனில் குழைத்து ஒரு வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குறையும்.

முசுமுசுக்கைக் கீரையின் சாற்றில் சிறிது கோரோசனை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிளைப்பு குறையும்.

சிற்றரத்தையை உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் மூச்சிளைப்பு, ஆஸ்துமா குணமாகும்.

நாட்டு மெழுகு, குங்கிலியம் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து நன்றாகப் பொடித்து, இதனுடன் சம அளவு நெய் கலந்து தணலில் போட்டு, அதிலிருந்து வரும் புகையைச் சுவாசித்துவந்தால் ஆஸ்துமா குறைந்து மூச்சுவிடுவது எளிதாகும்.

பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச் சாற்றைக் கலந்து குடித்தால் ஆஸ்துமா மட்டுப்படும்.

கண்டங்கத்திரி செடியை வேருடன் எடுத்து, காய வைத்து, இடித்துப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.

குழந்தைகளுக்கு, காக்கரட்டான் விதைகளை நெய்யில் வறுத்துப் பொடி செய்து 5 அரிசி எடை கொடுத்து வந்தால் ஆஸ்துமா குறையும்.

Leave a Reply