கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நிரபராதி என இலங்கை நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இலங்கையின் ராணுவ தளபதியாக பணியாற்றிய சரத் பொன்சேகா, ராஜபக்சே ஆட்சியின்போது, விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். விடுதலைப்புலிகளுக்கு தோல்விகளுக்கு இவர் எடுத்த மனிதாபிமற்ற முடிவுகளே காரணம் என பரவலாக கூறப்பட்டது. போரில் வெற்றி பெற்றவுடன் தனது ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து விலகிய பொன்சேகா, கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டார். தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பொன்சேகா, மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி பொன்சேகாவின் குடியுரிமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன. பொன்சேகா மீதான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதை அடுத்து சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு அளிக்க புதிய ஜனாதிபதியான சிறிசேனா முடிவு செய்தார்.
இந்நிலையில், சரத் பொன்சேகா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு நீதிமன்ற தேவிகா தென்னகோன் விடுத்துள்ள அந்த தீர்ப்பில், சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளர் சேனக சில்வா ஆகியோர் நிரபராதிகள் எனக் கூறி அவர்களை விடுதலை செய்தார்.