கட்டுமானத் துறை பெரிதும் எதிர்பார்த்திருந்த இந்திய பட்ஜெட் வந்துவிட்டது. கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம், நிலங்களின் பதிவுக் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சினைகளால் சென்ற ஆண்டு பின்னுக்குப் போன ரியல் எஸ்டேட் துறைக்குப் புது உற்சாகம் தரும் என எல்லாத் தரப்பினரும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி இருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட் கட்டுமானத் துறைக்குச் சாதகமாக இல்லை என்றே பெரும்பாலான கட்டுமானத் துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
சிட்டிபாபு, முதன்மைச் செயல் அதிகாரி, அக்ஷயா ஹோம்ஸ்
மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த 100 ஸ்மார்ட் சிட்டிகள், ரியல் எஸ்டேட் டெவலப்மெண்ட் ஃபண்ட் போன்ற பல திட்டங்களால் இந்த பட்ஜெட் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக இருந்தது. இது மட்டுமில்லாமல் 2022க்குள் அனைவருக்கும் வீடு என்னும் இலக்கையையும் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இவை எதற்கும் தொடர்பில்லாத பட்ஜெட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்கட்டமைப்புக்கு இந்த பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஒரு சாதகமான அம்சம்.
ஜான் பிரிட்டோ, முன்னாள் செயலாளர், சென்னைப் புறநகர் கட்டுமானச் சங்கம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட். ஏற்கனவே தேக்க நிலையில் இருந்த கட்டுமானத் துறைக்குச் சாதகமான அம்சங்களுடன் இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட் அதற்கு மாறாக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. சொத்து வாங்குவதற்கான சேவை வரியை உயர்த்தி இருக்கிறார்கள். ஏற்கனவே மந்தநிலையில் உள்ள ரியல் எஸ்டேட் இதனால் மேலும் பலவீனம் அடையும். இந்த பட்ஜெட்டில் உள்ள ஒரே ஒரு சாதகமான அம்சம் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்திப்பது மட்டும்தான்.
ரஜீஸ்குமார், தலைவர், கன்னியாகுமரி, மாவட்டக் கட்டுமானச் சங்கம்
இந்த பட்ஜெட், எதிர்பார்ப்புக்கு மாறானது. ஏற்கெனவே கிட்டத்தட்ட முழுத் தேக்க நிலையில் கட்டுமானத் துறை தள்ளாடிக் கொண்டிருக்கும்போது அதற்கு புத்துயிர் தரும் வகையில் இந்த பட்ஜெட் இல்லை. கட்டுமானப் பொருள்களின் விலை கட்டுங்கடாமல் சென்று கொண்டிருக்கும் சூழலில் சிமெண்டுக்கான சரக்கு வரியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் சிமெண்ட் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்த சிமெண்ட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற எங்கள் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
அத்தப்பன், செய்தித் தொடர்பாளர், கோயம்புத்தூர் கட்டிடப் பொறியாளர் சங்கம்
இந்த பட்ஜெட் எங்களுக்குச் சாதகமானதாக இல்லை. ஏற்கெனவே பல பிரச்சினைகளுடன் இருக்கும் கட்டுமானத் துறை இந்த பட்ஜெட்டால் மேலும் மோசமான நிலைக்குப் போகக்கூடிய சூழல்தான் இருக்கிறது. சிமெண்ட் விலையைக் குறைக்க நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் மாறாக இந்த பட்ஜெட்டால் சிமெண்ட் விலை மேலும் உயரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டிட அனுமதி வாங்குவதில் உள்ள சிக்கல் எனப் பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒரு புத்துணர்வுட்டும் அம்சம் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது மாதிரியான அம்சம் இல்லை.
ராஜேஷ் என். தவே, தலைவர், சென்னை ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் சங்கம்
இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கெனத் தனியாக எந்தச் சாதகமான அம்சமும் இல்லை. சேவை வரியை 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது அரசு. இதனால் ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்படும். இதையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால் இந்த அரசு கொண்டு வந்த திட்டங்களில் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (REIT) ரியல் எஸ்டேட்டுக்குச் சாதகமான ஒரு விஷயம். மேலும் பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது. இதுவும் ஒரு சாதகமான அம்சம்.
சி. சேகர்ரெட்டி, தலைவர், கிரடாய்
கட்டுமானத் துறைக்கு உத்வேகம் தரக்கூடிய விஷயம் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. அதுமட்டுமில்லாமல் சேவை வரியும் 12.36 சதவிகிதத்தில் இருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.