ஒரே வாரத்தில் ஒன்பது படங்கள் ரிலீஸ் ஏன்?
கோலிவுட் திரையுலகில் வாரந்தோறும் நான்கு அல்லது ஐந்து படங்கள் அதிகபட்சமாக வெளியாகி கொண்டிருந்த நிலையில் வரும் வாரம் மொத்தம் ஒன்பது திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஐவராட்டம், வானவில் வாழ்க்கை, மகாபலிபுரம், தண்ணில கண்டம், ராஜதந்திரம், இரவும் பகலும், கதம் கதம், சங்கராபரணம் மற்றும் தவறான பாதை ஆகிய ஒன்பது படங்கள் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. ஏற்கனவே ரிலீசான என்னை அறிந்தால், அனேகன், எனக்குள் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒன்பது படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வரும் வாரங்களில் கொம்பன், உத்தம வில்லன், ஓகே கண்மணி, நண்பேண்டா போன்ற பெரிய நட்சத்திரங்கள் படங்கள் வெளியாகவுள்ளதால், அவசர அவசரமாக சிறிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் ஒரே வாரத்தில் ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் ரிலீசாகவுள்ள ஒருசில படங்கள் காலைக்காட்சி அல்லது இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.