சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சிறப்பு வாய்ந்த மாபெரும் வெற்றியை முதல்வர் பதவியை கைப்பற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு அவரது கட்சியில் இருந்தே சோதனை மேல் சோதனை வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க்கொடியை உயர்த்திய நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பதவியிலிருந்து அஞ்சலி தமானியா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதனால் அக்கட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பதவி விலகிய அஞ்சலி அரவிந்த் கெஜ்ரிவால் மீது திடுக்கிடும் புகார்களை ஆதாரங்களுடன் கூறியுள்ளதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதற்கு முன்னர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலரை விலைக்கு வாங்க முயற்சித்து குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆடியோ டேப் ஆதாரம் வெளியானதே அஞ்சலி தமானியா ராஜினாமாவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.கடந்த முறை நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை பிடிக்க முடியாததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை அமைத்தது. காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 49 நாட்களில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆட்சி கவிழ்ந்தது.
பின்னர், பா.ஜ.க. அங்கு ஆட்சியை பிடிப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலரை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம் நடத்தியதாகவும் அதுகுறித்த டேப் ஆதாரங்கள் இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த நிலையில் தற்போது அந்த டேப் வெளியாகியுள்ளது.
இந்த ஆடியோ டேப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ் கார்க் என்பவரும் பேசியவைகள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ள்து.
அரவிந்த் கெஜ்ரிவால்: நாங்கள் ஆட்சியை அமைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. மணிஷ் சிசோடியா காங்கிரசோடு தொடர்பில் உள்ளார். ஒன்று செய்யுங்கள். காங்கிரசை உடைத்து, 6 எம்.எல்.ஏ.க்களை வெளியே இழுத்து, புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்க சொல்லுங்கள். அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களாக எங்களது ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வையுங்கள்.
ராஜேஷ் கார்க்: ஆகட்டும் ஐயா.
அரவிந்த் கெஜ்ரிவால்: நாங்கள் ஒன்றரை மாதமாக முயற்சித்து வருகிறோம். காங்கிரஸ் எங்களை ஆதரிப்பதுபோல் இல்லை. இந்த 6 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வை ஆதரித்து வந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் முஸ்லிம்கள்.
ராஜேஷ் கார்க்: இது தொடர்பாக உரிய வகையில் திட்டமிட தொடங்குகிறேன்.
அரவிந்த் கெஜ்ரிவால்: அவர்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டார்கள். அந்த ஆறு எம்.எல்.ஏ.க்களும் எங்களைதான் ஆதரிக்க வேண்டும்.
ராஜேஷ் கார்க்: ஆகட்டும் ஐயா, ஆகட்டும்.
இன்று வெளியான இந்த ஆடியோ ஆதாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆடியோ டேப் வெளியானதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பதவியிலிருந்து அஞ்சலி தமானியா ராஜினாமா செய்துள்ளார். இதனால் அக்கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
” நான் கட்சியிலிருந்து விலகுகிறேன்….இந்த முட்டாள்தனத்திற்காக நான் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை. நான் அவரை ( கெஜ்ரிவால்) நம்பினேன். குதிரை பேரத்தில் ஈடுபடாத கொள்கைக்காகத்தான் நான் கெஜ்ரிவாலை ஆதரித்தேன்.
ஆனால் ஆடியோ டேப்பில் கெஜ்ரிவாலின் குரலை கேட்டபோது நான் உடைந்துவிட்டேன். ஒன்று இந்த கட்சி கொள்கைப்படி செயல்பட வேண்டும் இல்லாவிட்டால் இருக்கக் கூடாது. ஆம் ஆத்மி அரசியல் கட்சி அல்ல. அது ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கனவு” என தமானியா தனது டிவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
ஏற்கனவே கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த யோகேந்திர யாதவ் உள்ளிட்டவர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.