நம்மூரில் ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் வீடு வாங்கினால் தங்க நாணயம் இலவசம் என்று விளம்பரங்கள் செய்து கொண்டு வரும் நிலையில் இந்தோனேஷியாவில் வீடு வாங்கினால் திருமணம் செய்து கொள்ள பெண் இலவசம் என்ற விளம்பரம் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் வெளியான விளம்பரம் ஒன்றில் இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் உள்ள வீடு ஒன்று விற்பனைக்கான உள்ளது என்று கூறப்பட்டிருக்கும் விளம்பரத்தின் கடைசி வரிகளில் “ஒரு அரிய வாய்ப்பு” இந்த வீட்டை வாங்குபவர் அதன் உரிமையாளரிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விளம்பரத்துடன் அந்த விளம்பரத்தை கொடுத்த 40 வயது வீனா லியா என்ற பெண்ணின் புகைப்படமும் வெளியாகி இருந்தது.
இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய நாட்டின் அனைத்து ஊடகங்களும், அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி படை எடுத்தன. அந்நாட்டு போலீசாரும் இது மோசடி விளம்பரமாக கருதி லியாவை அணுகியபோதுதான், இந்த விளம்பரத்தை லினா கொடுக்கவில்லை என்றும், ரியல் எஸ்டேட் புரோக்கரின் வேலை என்றும் தெரிய வந்தது.
போலீசாரிடம் இத்தகைய விளம்பரத்தை தான் வெளியிட கூறவில்லை என்று கூறிய லினா, தனது ரியல் எஸ்டேட் நண்பரிடம் வீட்டை விற்பது குறித்து விளம்பரப்படுத்துங்கள். அதே சமயம் வீட்டை வாங்க விருப்பமுள்ளவர், திருமணம் ஆகாதவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ இருப்பதுடன், மனைவியையும் தேடுபவராக இருந்தால் தனக்கு தெரியப்படுத்துங்கள் என்று மட்டும் கூறியதாகவும் லினா போலீசாரிடம் தெரிவித்தார்.
அவ்வாறு யாராவது வீட்டை வாங்க முன்வந்தால், விதவையாக இருக்கும் தானும் அந்நபருடன் பேச்சு நடத்த ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தாகவும் லினா கூறியுள்ளார். ஆனால் ஒரு போதும் இந்த விவரத்தை ஆன் லைனில் வெளியிடுமாறு தான் கூறவில்லை என்றும் லினா தெரிவித்துள்ளார்.