ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் இரண்டு பேர் டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சில தினங்களுக்கு முன், புதியதலைமுறை தொலைக்காட்சி தாலி பெண்களுக்கு தேவையா? தேவையில்லையா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ஒருசில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது அதை படம்பிடிக்க வந்த அதே தொலைக்காட்சியை சேர்ந்த ஒளிப்பாதிவாளர் மீது கண்மூடித்தனமாக அந்த அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் மூன்று மணியளவில் தொலைக்காட்சி அலுவலகத்தை சில மர்ம நபர்கள் நோட்டமிட்டபடி இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்துள்ளனர். அப்போது, திடீரென அந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 டிபன் பாக்ஸ் வெடி குண்டுகளை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். ஆனாலும் இந்த சம்பவம் அந்த தொலைக்காட்சி கட்டிடத்தில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வெடிமருந்து நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீசார், டிபன் பாக்ஸ் வெடி குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி குண்டு தாக்குதல் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.