ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள டாடார்ஸ்டான் குடியரசு என்ற பகுதியில் அட்மிரல் சென்டர் என்ற மிகப்பெரிய ஷாப்பிங் மகாலில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.. தீ விபத்து ஏற்படும்போது அந்த சென்டரில் சுமார் 600 பேருக்கு மேல் இருந்ததாகவும், தீயணைப்பு படைவீரர்களின் சாகசத்தால் பலர் உயிருடன் காப்பாற்றப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அட்மிரல் ஷாப்பில் மாலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களை உடனடியாக காவலாளிகள் வெளியேற்றினர். போலீசாருக்கும் தீயணைப்பு படையினர்களுக்கும் தகவல் கொடுத்த அவர்கள், தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பே தீயை அணைக்கும் பணியிலும், பொதுமக்களை காப்பாற்றும் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென பரவி மாலின் மேற்கூரை சிறிது நேரத்தில் இடிந்து விழுந்தது. இதில் பல அப்பாவி பொதுமக்கள் சிக்கினர். இதுவரை 30 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று கூறப்பட்டு வந்தபோதிலும், ஐந்து உடல்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புப்படை வீரர் ஒருவர் கூறும்போது: ‘‘பெரும்பாலோனோரை மீட்டு விட்டோம். மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களின் உறவினர்களிடம் இருந்து செல்போன் நம்பரை பெற்று தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்’’ என்றார்.
நேற்று ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கிகொண்டவர்களை தேடும்பணி தொடர்சியாக நடைபெற்று வருகிறது.