சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவு கொடுத்தது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தனது அறிக்கையின் மூலம் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: மத்தியில் உள்ள பாஜக அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சில திருத்தங்களை அவசரச் சட்டத்தின் வாயிலாக கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
மக்களவையில் இந்த மசோதா கடந்த 9-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது எதிர்க்கட்சிகள் தெரிவித்த கவலைகளின் அடிப்படையில், பாஜக அரசு மேலும் 9 திருத்தங்களை கடந்த 10-ஆம் தேதி தாக்கல் செய்தது.
இந்தச் சட்டத் திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு விலக்குகள் அளிக்கப்படக் கூடாது என்பது அதிமுகவின் முடிவாகும். அதன்படி, இந்தச் சட்டத் திருத்தத்தை எனது உத்தரவின்படி அதிமுக முன்மொழிந்தது.
இதை ஏற்றுக் கொண்ட பாஜக அரசு, ஏற்கெனவே தாக்கல் செய்த சட்டத் திருத்தத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கென இருந்த சலுகைகளை விலக்கிக் கொண்டு விட்டது. இதைத் தொடர்ந்து, எனது உத்தரவின்பேரில் நில கையக சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது.
நன்மைக்கு மட்டுமே ஆதரவு: அதிமுகவைப் பொருத்தவரை, தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு எவை நன்மை ஏற்படுத்தக் கூடியதோ அவற்றை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் எதிரானவற்றை எதிர்ப்பது என்பதும்தான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொள்கையாகும். அந்த அடிப்படையில் இந்த சட்டத் திருத்தத்தையும் அதிமுக ஆதரித்தது.
என்னைப் பொருத்தவரை, விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி அளிப்பதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து சட்டம் இயற்றிய போதும் அதைச் செயல்படுவத்துவதற்கான அதிகாரம் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது என்பதால் அதை தமிழகத்தில் தடுத்து நிறுத்துவோம் என உறுதிபடத் தெரிவித்தேன்.
அதன்படி, அது தடுத்து நிறுத்தப்பட்டது. மரபணு மாற்றப் பயிர்களுக்கும் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, மீத்தேன் எரிவாயுத் திட்டம் உள்பட பல்வேறு மத்திய அரசின் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஆதரவு அளித்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
ஆனால், தமிழக மக்களின் நன்மைக்காவே நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அதிமுக ஆதரித்தது என்பதை இப்போதாவது கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.